சென்னை,
சென்னை கொரட்டூரில் 'பிரிட்ஜ்' வெடித்து வீடு தீப்பிடித்து எரிந்ததில் பெண் உடல் கருகி பலியானார். கணவர், மகன் படுகாயம் அடைந்தனர்.
சென்னை கொரட்டூர் பெரியார் நகர், விவேகானந்தா பள்ளி அருகே உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் கீழ்தளத்தில் வசித்து வருபவர் ரமணி (55 வயது). இவரது மனைவி அகிலா (48 வயது). இவர்களுடைய மகன் கார்த்திக் (23 வயது). ரமணி சொந்தமாக இரும்பு தொழில் செய்து வருகிறார். அகிலா சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு, ஒரு கால் அகற்றப்பட்ட நிலையில் வீட்டிலேயே சிகிச்சை பெற்று வந்தார். கார்த்திக் என்ஜினீயரிங் படிப்பை முடித்துவிட்டு தாம்பரத்தில் உள்ள தனியார் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு அகிலா வீட்டின் படுக்கை அறையில் படுத்து தூங்கினார். ரமணி, அவரது மகன் கார்த்திக் இருவரும் வீட்டின் ஹாலில் படுத்திருந்தனர். நேற்று அதிகாலை சுமார் 3 மணியளவில் அவர்களது வீட்டில் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதனால் வீடு முழுவதும் புகை மண்டலமாக மாறியது. இதில் திடுக்கிட்டு எழுந்த ரமணி, கார்த்திக் ஆகியோர் அலறி அடித்துக்கொண்டு வெளியே ஓடி வந்தனர்.
தீ விபத்தில் அவர்கள் இருவரும் படுகாயம் அடைந்தனர். ஒரு கால் அகற்றப்பட்டதால் அகிலாவால் படுக்கையில் இருந்து உடனடியாக எழுந்து வெளியே வரமுடியவில்லை. அதற்குள் வீடு முழுவதும் தீ கொழுந்துவிட்டு எரிந்தது. இதுபற்றி தகவல் அறிந்த அம்பத்தூர் தீயணைப்பு நிலைய அலுவலர் ராமதாஸ் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர்.
பின்னர் வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது, படுக்கை அறையில் அகிலா, தீயில் உடல் கருகிய நிலையில் பரிதாபமாக இறந்து கிடந்தார். அங்கிருந்த ஏ.சி. எந்திரம் தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தது. அதனை தீயணைப்பு வீரர்கள் அணைத்தனர். வீட்டில் இருந்த டி.வி., பிரிட்ஜ், கட்டில் உள்ளிட்ட பொருட்கள் அனைத்தும் தீக்கிரையாகின.
இதுகுறித்து தகவல் அறிந்த கொரட்டூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜார்ஜ் மில்லர் தலைமையிலான போலீசார், பலியான அகிலாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தீ விபத்தில் படுகாயம் அடைந்த ரமணி, கார்த்திக் இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுகுறித்து கொரட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அவர்களது வீட்டில் இருந்த 'பிரிட்ஜ்' பழுதடைந்த நிலையில் இருந்துள்ளது. அதிகாலையில் திடீரென மின்கசிவால் 'பிரிட்ஜில்' இருந்த சிலிண்டர் வெடித்து சிதறியதால் வீடு முழுவதும் தீ பரவியதும், இதில் அகிலா உயிரிழந்ததும், தந்தை, மகன் படுகாயத்துடன் உயிர் தப்பியதும் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
எனினும் தீ விபத்துக்கு வேறு ஏதும் காரணமா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.