சென்னை,
சென்னை வளசரவாக்கம் பகுதியைச் சேர்ந்த 23 வயது இளம்பெண், பட்டப்படிப்பு முடித்துவிட்டு குறும்பட உதவி இயக்குனராக பணிபுரிந்து வருகிறார். இவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பல போலியான ஐ.டி.களில் இருந்து ஆபாசமான குறுஞ்செய்திகளை மர்ம நபர் அனுப்பி வந்துள்ளார்.
இதுகுறித்து நடவடிக்கை எடுக்கும்படியும் வளசரவாக்கம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து இந்த சம்பவத்தில் ஈடுபட்ட சின்ன போரூரைச் சேர்ந்த பிரைஸ் கிறிஸ்டன் (21) என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து ஒரு செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது.
விசாரணையில் பிரைஸ் கிறிஸ்டனும், இளம்பெண்ணும் கல்லூரியில் ஒன்றாக படித்ததும், நண்பர்களான இருவரும் ஒன்றாக சேர்ந்து குறும்படம் எடுத்தபோது ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரைஸ் கிறிஸ்டின், போலி இன்ஸ்டாகிராம் ஐ.டி.கள் மூலம் தொடர்ந்து அந்த பெண்ணுக்கு ஆபாசமாக குறுஞ்செய்திகளை அனுப்பி வந்ததும் தெரியவந்தது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.