சென்னை,
சென்னை தாம்பரம் அடுத்த சேலையூர் அருகே உள்ள செம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் மாரிமுத்து (வயது 42). கட்டிடத் தொழிலாளியான இவர், தீவிர விஜய் ரசிகர் என கூறப்படுகிறது. இவர் தனது நண்பர்களுடன் அமர்ந்து மது அருந்தினார். அப்போது மாரிமுத்துவின் நண்பர்கள் அவரிடம் விஜய் ஆட்சி அமைக்க முடியாது. நாங்கள் அவரை ஆட்சி அமைக்கவும் விடமாட்டோம் என கூறி கிண்டல் செய்ததாக தெரிகிறது.
இதனால் மதுபோதையில் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் வீட்டுக்கு சென்ற மாரிமுத்து, கொசுவர்த்தி சுருளை (விஷம்) தண்ணீரில் கரைத்து குடித்துள்ளார். பின்னர் தனது மனைவியிடம், விஜய் ஆட்சி அமைக்க மாட்டார். அதனை என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. எனவே கொசுவர்த்தி சுருளை தண்ணீரில் கரைத்து குடித்துவிட்டேன் என தெரிவித்துள்ளார்.
அதைகேட்டு அதிர்ச்சியடைந்த அவரது மனைவி, உடனடியாக மாரிமுத்துவை தாம்பரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக அவர் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.