சென்னை,
தமிழ்நாடு காவல்துறையின் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படை (SSF), மாநிலம் முழுவதும் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய புகார்களுக்கு விரைந்து நடவடிக்கை எடுப்பதுடன், தீவிர ரோந்துப் பணி, குற்றத்தடுப்பு காவல் நடவடிக்கைகள், சமூக ஒருங்கிணைப்புடன் கூடிய செயல்பாடுகள் மூலம் தொடர்ந்து அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருகிறது.
இது தொடர்பாக வெளியான செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-
சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை தொடர்ந்து விழிப்புடனும், முனைப்புடனும் குற்றத் தடுப்புப் பணிகளை திறம்பட மேற்கொண்டு வருகிறது. பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பையும், நலனையும் உறுதி செய்வதில் இப்படை தொடர்ந்து அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருகிறது. இதற்காக தொடர்ச்சியான கண்காணிப்பு, புகார்களுக்கு விரைவான நடவடிக்கை மற்றும் பல்வேறு குற்றத்தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
குற்றத்தடுப்பு காவல் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, குற்றம் நடைபெற சாத்தியமுள்ள இடங்கள் தொடர்பான தகவல்களை சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை சேகரித்து, ஆய்வு செய்து, கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய பகுதிகளை அடையாளம் கண்டு தொடர் ரோந்து செய்து வருகிறது. மேலும் காவல் இருப்பை உறுதிசெய்து, வழக்கமான ரோந்துப் பணிகள் மற்றும் குற்றத்தடுப்பு நடவடிக்கைகள் மூலம், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கும் வகையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.
இந்த வாரத்தில் 18.09.2026 முதல் 24.09.2026 வரை, சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட குறிப்பிடத்தக்க பணிகள் பின்வருமாறு:
15.09.2026 அன்று, மயிலாடுதுறை மாவட்ட சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையினர் ஒரு அரசு மேல்நிலைப் பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்திய பின், 13 வயதுடைய 8-ஆம் வகுப்பு மாணவர் ஒருவர் 21.09.2026 அன்று 1091 உதவி எண்ணின் மூலம் தனக்கு 45 வயது நபர் ஒருவர் 2025 ஆம் ஆண்டு முதல் இறால் பண்ணை குடோனில் வைத்து தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தி வந்ததாகவும், இதுகுறித்து யாரிடமும் தெரிவிக்கக் கூடாது என மிரட்டியதாகவும் தெரிவித்தார்.
உடனடியாக, சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையினர் சம்பந்தப்பட்ட காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். குழந்தைகள் நல அலுவலர் அளித்த புகாரின் அடிப்படையில், சீர்காழி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு அந்நபர் கைது செய்யப்பட்டு, நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டார். இச்சம்பவம், சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையின் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மற்றும் 1091 உதவி எண் ஆகியவை, குழந்தைகள் தங்களுக்கு நேரிடும் துன்புறுத்தல்களை பாதுகாப்பாகத்
தெரிவித்து, உரிய நேரத்தில் பாதுகாப்பும் உதவியும் பெறுவதற்கு முக்கியப் பங்காற்றுவதை எடுத்துக்காட்டுகிறது.
ஆவடி சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையினர், பொன்னேரியில் உள்ள அரசு பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்ச்சியின் போது, 12-ஆம் வகுப்பு பயிலும் 17 வயது மாணவி ஒருவர், பள்ளிக்கு ரயிலில் சென்று வரும் போது 44 வயது நபர் ஒருவர் தன்னை தொடர்ந்து பின்தொடர்ந்து வந்து தொல்லை தருவதாக தெரிவித்துள்ளார். இதையடுத்து, சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படையினர், உடனடியாக மாணவியின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்ததுடன், சம்பந்தப்பட்ட நபரை அடையாளம் கண்டு அந்த நபரை பொன்னேரி காவல் துறையினர் உதவியுடன் கண்டுபிடித்தனர். மாணவியின் தாயார் அளித்த புகாரின் அடிப்படையில், கொருக்குப்பேட்டை ரயில்வே காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, சம்பந்தப்பட்ட நபர் கைது செய்யப்பட்டு, நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டார்.
18.09.2026 அன்று, ராமநாதபுரம் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையினர் அரண்மனை சந்திப்பில் நடத்திய விழிப்புணர்வு நிகழ்ச்சியின் போது, 19 வயது பெண் ஒருவர் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையினரை அணுகி, பொது இடத்தில் 36 வயது நபர் ஒருவர் தன்னிடம் அநாகரிகமாக நடந்து கொண்டதுடன், தனது Instagram ID-யை வழங்க மறுத்ததால் தன்னை மிரட்டியதாக புகார் தெரிவித்தார். இதையடுத்து, சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படையினர் உடனடியாக சம்பந்தப்பட்ட காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அப்பெண் அளித்த புகாரின் அடிப்படையில், பஜார் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, சம்பந்தப்பட்ட நபர் கைது செய்யப்பட்டு, நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டார்.
21.09.2026 அன்று பிற்பகல் 02.45 மணியளவில், மயிலாப்பூர் மாவட்ட சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது, 23 வயது பெண் ஒருவர், ராமசாமி சாலை அருகே இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத இருவர் தனது செல்போனை பறித்துச் சென்றதாக தெரிவித்தார். தகவல் கிடைத்தவுடன், சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையினர் துரிதமாக செயல்பட்டு, பொதுமக்கள் உதவியுடன் சம்பந்தப்பட்ட நபர்களை விரட்டிச் சென்று பிடித்து, மயிலாப்பூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். மயிலாப்பூர் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கில் ஈடுபட்ட நபர்கள் ஜீவா மற்றும் பிரதாப் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து செல்போன் மீட்கப்பட்டதுடன், குற்றச் சம்பவத்திற்கு பயன்படுத்தப்பட்ட இருசக்கர வாகனமும் காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர், இருவரும் நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டனர்.
18.09.2026 முதல் 24.09.2026 சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை, களப்பிரிவினரின் செயல்பாடுகள்
18.09.2026 முதல் 24.09.2026 வரை, சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையின் களப்பணி பிரிவுகள் 236 புகார்களுக்கு சம்பவ இடத்திலேயே நேரடியாகச் சென்று நடவடிக்கை மேற்கொண்டனர். 16 குற்ற வழக்குகள் பதிவு செய்ய உதவி புரிந்துள்ளனர். மேலும், காணாமல் போன 02 பெண்கள் மற்றும் 04 குழந்தைகள் கண்டுபிடிக்கப்பட்டு பாதுகாப்பாக அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
குற்ற தடுப்பு மற்றும் சமூக விழிப்புணர்வு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் மற்றும் புலம்பெயர் தொழிலாளர்கள் மத்தியில் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு தொடர்பாக 3,607 விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. மேலும் 12,942 குற்றம் நடக்க வாய்ப்புள்ள பகுதிகள், குற்ற தடுப்பு ரோந்துப் பணிகளின் மூலம் கண்காணிக்கப்பட்டது.
இக்காலகட்டத்தில், அறிவுசார் குறைபாடுகளைக் கொண்ட 05 நபர்கள் மீட்கப்பட்டு, அவர்களுக்கு மறுவாழ்வு உதவிகள் கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. மேலும் 01 குழந்தைத் திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டதுடன், பள்ளிப் படிப்பை இடைநிறுத்திய 43 குழந்தைகள் மீண்டும் கல்வி நிறுவனங்களில் சேர்வதற்கு தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டது.
சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை தலையீட்டின் பேரில் சென்னை, தாம்பரம், ஆவடி, திருநெல்வேலி, ராமநாதபுரம், கள்ளக்குறிச்சி, தேனி, மயிலாடுதுறை, கடலூர், தென்காசி, மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் புகார்களுக்கு உரிய சட்ட பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. மேலும், பாதிக்கப்பட்டவர்களை மீட்டு பாதுகாப்பது மற்றும் குற்றம் சாட்டப்பட்டவர்களை கைது செய்து நீதிமன்றக் காவலுக்கு அனுப்புவது உள்ளிட்ட நடவடிக்கைகளில் சம்பந்தப்பட்ட காவல்துறையினருக்கு சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை களப்பிரிவினர் உதவியாக இருந்ததனர்.
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக உடனடி நடவடிக்கை மேற்கொள்ள, பொதுமக்கள் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையின் உதவி எண் 1091-ஐ தொடர்பு கொள்ளலாம். மேலும், பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாகவோ அல்லது பாதுகாப்பற்றதாகவோ கருதப்படும் இடங்கள் மற்றும் பகுதிகள் குறித்த தகவல்களையும் பொதுமக்கள் 1091 உதவி எண்ணில் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். பொதுமக்களிடமிருந்து பெறப்படும் தகவல்களின் அடிப்படையில், சம்பந்தப்பட்ட பகுதிகளில் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை உரிய தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் தேவையான தொடர் நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.
சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை, குற்றத் தடுப்பு, உடனடி தலையீடு, விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், மீட்பு மற்றும் மறுவாழ்வு நடவடிக்கைகள் மற்றும் உரிய சட்ட நடவடிக்கைகள் ஆகியவற்றின் மூலம் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை மேம்படுத்தி மக்களின் நம்பிக்கையை பெற்று வருகிறது. இந்தத் தொடர்ச்சியான நடவடிக்கைகளின் மூலம், தமிழ்நாடு முழுவதும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பாதுகாப்பான மற்றும் உறுதியான சூழலை உருவாக்குவதில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை தொடர்ந்து அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருகிறது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.