சென்னை,
சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையின் கடந்த மாத செயல்பாடுகள் குறித்த செய்திக்குறிப்பினை தமிழ்நாடு காவல்துறை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியான செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-
தமிழ்நாடு காவல்துறையின் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையினர் (SSF), குற்றத் தடுப்பு நடவடிக்கைகள், தீவிர ரோந்துப் பணிகள், புகார்களுக்கு துரித நடவடிக்கை மற்றும் சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களுடன் சிறப்பான ஒருங்கிணைப்பு ஆகியவற்றின் மூலம், மாநிலம் முழுவதும் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை தொடர்ந்து மேம்படுத்தி வருகின்றனர்.
01.09.2026 முதல் 30.09.2026 வரையிலான காலகட்டத்தில், பெண்கள் செய்வதில் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் நலனை உறுதி சிங்கப்பெண் சிறப்புப் படை (SSF) குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியுள்ளது. இக்காலகட்டத்தில், சிங்கப்பெண் சிறப்புப் படையினர் 1,045 புகார்களுக்கு சம்பவ இடத்திற்கே நேரடியாகச் சென்று உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். மேலும், காணாமல் போன 15 பெண்கள் மற்றும் 16 குழந்தைகள் கண்டுபிடிக்கப்பட்டு, அவர்களை பாதுகாப்பாக மீட்க உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
குற்றத் தடுப்பு மற்றும் சமூக விழிப்புணர்வு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையினர் கல்வி நிறுவனங்களில் 2,812 விழிப்புணர்வு நிகழ்ச்சிகளையும், பிற இடங்களில் 11,787 விழிப்புணர்வு நிகழ்ச்சிகளையும், புலம்பெயர் தொழிலாளர்களிடையே 706 விழிப்புணர்வு நிகழ்ச்சிகளையும் மேற்கொண்டுள்ளனர்.மேலும், குற்றத் தடுப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்தவும், பாதுகாப்பை உறுதி செய்யவும், அடையாளம் காணப்பட்ட 57,183 குற்றம் நடக்க சாத்தியமுள்ள இடங்களில் (Hotspots) தொடர் கண்காணிப்பு மற்றும் களப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதனுடன், சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையினர், அறிவுசார் குறைபாடுடைய 25 நபர்களை (22 பெண்கள் மற்றும் 3 ஆண்கள்) மீட்டுள்ளனர். மேலும், 17 குழந்தைத் திருமணங்கள் தடுக்கப்பட்டதுடன், உரிய நேரத்தில் மேற்கொள்ளப்பட்ட தலையீட்டின் மூலம் பள்ளிப்படிப்பை இடைநிறுத்திய 227 குழந்தைகள் மீண்டும் பள்ளியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்த வாரத்தில்,25.09.2026 முதல் 01.10.2026 வரை சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட குறிப்பிடத்தக்க பணிகள் பின்வருமாறு:
27.09.2026 அன்று, சென்னை பூக்கடை மாவட்ட சிங்கப்பெண் சிறப்புப் அதிரடிப்படையினர் ரோந்துப் பணியிலிருந்தபோது, MTC பேருந்திலிருந்து இறங்கிய 19 வயது பெண் ஒருவர் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையினரை அணுகி, தான் பேருந்தில் பயணம் செய்தபோது ஒரு நபர் தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாகத் தெரிவித்தார். உடனடியாக, சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையினர் அந்த நபரைப் பிடித்து, சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அந்த நபர் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டார். சிங்கப்பெண் சிறப்புப் படையினரின் துரிதமான தலையீட்டின் மூலம், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு உடனடி உதவியும் பாதுகாப்பும் வழங்கப்பட்டது.
தென்காசி மாவட்ட சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையினர் பள்ளி ஒன்றில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்திக் கொண்டிருந்தபோது, அப்பள்ளியில் 12-ஆம் வகுப்பு பயின்று வந்த 17 வயது மாணவி ஒருவர் கடந்த இரண்டு மாதங்களாக பள்ளிக்கு வரவில்லை என்பது தெரியவந்தது. இதையடுத்து, சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையினர் அந்த மாணவியிடம் விசாரணை மேற்கொண்டதில், அவரது வீட்டருகில் உள்ள 2 நபர்கள் பல்வேறு சந்தர்ப்பங்களில் அவருக்கு பாலியல் ரீதியான துன்புறுத்தல் அளித்து, மிரட்டியதாக தெரிவித்தார். இதன் காரணமாக, மாணவி பள்ளிக்குச் செல்வதை நிறுத்தியிருந்தது தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து, சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையினர் குழந்தைகள் நலக் குழுவிற்கு (CWC) தகவல் தெரிவித்து, மாணவியின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை மேற்கொண்டனர். வழக்குப் பதிவு செய்யப்பட்டு, சம்பந்தப்பட்ட நபர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும், மாணவிக்குத் தேவையான பாதுகாப்பு மற்றும் உதவிகள் கிடைக்க வழிவகை செய்யப்பட்டது.
29.09.2026 அன்று, கோயம்பேடு மாவட்ட சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, ஒரு பெண்ணிடம் அத்துமீறி நடந்து கொள்வதாக கிடைத்த தகவலின் பேரில், உடனடியாக சம்பவ இடத்திற்குச் சென்று அப்பெண்ணிடம் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், தனது அனுமதியின்றி ஒருவர் அவருடைய செல்போனில் தன்னை வீடியோ பதிவு செய்ததாக அப்பெண் தெரிவித்தார்.இதனைத் தொடர்ந்து, சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையினர் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்து, அப்பெண் புகார் அளிப்பதற்குத் தேவையான உதவிகளை மேற்கொண்டனர். அப்பெண் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, சம்பந்தப்பட்ட நபர் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து வளர் இளம் தலைமுறையினரிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில், சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை (SSF) சார்பில் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரி மாணவர்களுக்காக குறும்படப் போட்டி நடத்தப்படுகிறது. இப்போட்டிக்கான தலைப்புகள் 1)பெண்களின் பாதுகாப்பில் ஆண்களின் பங்கு. 2) குற்றங்களைத் தடுப்பதில் பார்வையாளர்களின் (Bystander) தலையீடு 3) பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுப்பதில் சமூகத்தின் பங்கு. மாணவர்கள் இவற்றில் ஏதேனும் ஒரு தலைப்பில் குறும்படங்களை தயாரித்து 10.10.2026-க்குள் https://bit.ly/SSF-ShortFilmCompetition என்ற இணையவழி இணைப்பின் மூலம் சமர்ப்பிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறது. இம்முயற்சியின் மூலம், மாணவர்களின் வெளிப்படுத்துவதுடன், படைப்பாற்றல் மற்றும் திறமைகளை பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பில் சமூகத்தின் பொறுப்புணர்வையும் பங்களிப்பையும் அதிகரிப்பதன் மூலம் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதை சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை (SSF) நோக்கமாகக் கொண்டுள்ளது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.