தமிழக செய்திகள்

நானும் இனி மதுரைக்காரன்தான்; வேட்புமனு தாக்கல் செய்த பின் சுந்தர்.சி பேட்டி

நல்லது செய்ய வேண்டும் என்று நினைத்தால் போதும் யார் எங்கு வேண்டுமானாலும் நிற்கலாம் என்று சுந்தர் சி கூறினார்.

அதிமுக - பாஜக கூட்டணியில் ஏ.சி.சண்முகத்தின் புதிய நீதிக்கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. அதிமுக சார்பில் ஒதுக்கப்பட்ட மதுரை மத்திய தொகுதி வேட்பாளராக இயக்குநர் சுந்தர்.சி அறிவிக்கப்பட்டார். அவர் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார். வேட்பு மனு தாக்கலின் போது சுந்தர் சியின் மனைவி குஷ்புவும் உடன் இருந்தார்.

வேட்பு மனு தாக்கல் செய்துவிட்டு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த சுந்தர் சி கூறியதாவது: மக்கள் வரவேற்பை பார்க்கும் போது வெற்றி நிச்சயம் என்பது உறுதியாகியுள்ளது. மதுரை மத்தி தொகுதி மக்கள் எனக்கு வாக்களிப்பார்கள் என்று நம்பிக்கை உள்ளது. பிரசாரம் ஆரம்பித்துவிட்டோம்.

10 வருஷமா ஒரே எம்.எல்.ஏ எந்த ஒரு நலத்திட்டங்களும் செய்யாமல் உள்ளார். அடிப்படை வசதிகள் இல்லை. இதைத்தான் நிறைவேற்றுமாறு மக்கள் கேட்கிறார்கள். மதுரை மாநகரை எவ்வளவோ முன்னேற்றலாம். எங்கு பார்த்தாலும் ஊழல், லஞ்சம் நிலவுகிறது. எல்லா குறைகளையும் களைந்து மதுரையை நம்பர் ஒன் சிட்டியாக மாற்ற வேண்டும். தமிழின் தலைநகரம் மதுரை.

நல்லது செய்ய வேண்டும் என்று நினைத்தால் யார் எங்கு வேண்டுமானாலும் நிற்கலாம். நல்லது செய்ய வேண்டும் என்று மனது இருந்தால் போதும். மதுரை மக்கள் எனக்கு வெற்றி தருவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. நான் வெளியூர்க்காரன் இல்லை. நானும் மதுரைக்காரன் தான். இங்கே வீடு பார்த்துவிட்டேன். மாதத்தில் 15 நாள் இனி இங்கேதான் இருப்பேன்”என்றார்.