தமிழக செய்திகள்

இனி அலுமினிய பாத்திரங்களுக்கும் ஐ.எஸ்.ஐ. தரச்சான்று கட்டாயம்: அக்டோபர் 1-ந் தேதி முதல் அமல்

அலுமினிய பாத்திரங்கள் உற்பத்தி செய்யும் பெரிய நிறுவனங்கள், ஐ.எஸ்.ஐ. முத்திரையை பயன்படுத்த வேண்டும்

கோவை,

நாம் சமையலறையில் அன்றாடம் பயன்படுத்தும் குக்கர், மிக்சி, கிரைண்டர், கியாஸ் அடுப்பு போன்றவற்றுக்கு ஐ.எஸ்.ஐ. தர நிர்ணய சான்று பெறும் நடைமுறை இருந்து வருகிறது. இதன் மூலம் பொருட்களின் தரமும், பயன்படுத்துவோரின் பாதுகாப்பும் உறுதி செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், சமையலறையில் நாம் அன்றாடம் பயன்படுத்தும் அலுமினிய பாத்திரங்களுக்கு ஐ.எஸ்.ஐ. தரச்சான்று பெறும் நடைமுறை அக்டோபர் 1-ந் தேதி முதல் கட்டாயமாக்கப்பட உள்ளன. அதாவது, ஐ.எஸ். 1660: 2024 என்ற தர நிலைகளை பராமரிப்பது கட்டாயமாக்கப்படுகிறது. அலுமினிய பாத்திரங்களின் தடிமன், அளவு, கைப்பிடிகளின் எடை தாங்கு திறன், தட்பவெப்ப தாங்குதிறன் என பல்வேறு நிலைகளில் தர நிர்ணயம் அடிப்படையில் இந்த சான்றிதழ் வழங்கப்படுகிறது.

இதன் மூலம் பாத்திரத்தில் 99.5 சதவீதம் அலுமினியம் இருப்பது கட்டாயமாகிறது. வரும் அக்டோபர் மாதம் 1-ந் தேதி முதல் அலுமினிய பாத்திரங்கள் உற்பத்தி செய்யும் பெரிய நிறுவனங்கள், ஐ.எஸ்.ஐ. முத்திரையை பயன்படுத்த வேண்டும். ஐ.எஸ்.ஐ. முத்திரை இல்லாத அலுமினிய பாத்திரங்களை உற்பத்தி செய்யவோ, இறக்குமதி செய்யவோ, விநியோகம் செய்யவோ, சேமிக்கவோ, வாடகைக்கு எடுக்கவோ, குத்தகைக்கு விடவோ கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது.