தமிழக செய்திகள்

இனி எல்லா தேர்தல்களிலும் தவெக வெற்றி பெறும் - சி.விஜயபாஸ்கர் பேச்சு

தமிழகத்தில் இனி விஜய் ஆட்சிதான் தொடரும் என்று எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

சென்னை,

அதிமுகவில் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டு அக்கட்சியில் இருந்து டாக்டர் சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் தங்கள் ஆதரவாளர்கள் 15 ஆயிரம் பேருடன் தவெகவில் இன்று இணைந்தனர். சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் அமைச்சர்கள் ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, செங்கோட்டையன் முன்னிலையில் இந்த இணைப்பு விழா நடைபெற்றது.

இந்த நிலையில் இந்த விழாவில் பேசிய எம்.ஆர்.விஜயபாஸ்கர் கூறியதாவது:-

ஒரு தலைவன் சரியான முடிவெடுக்காமல் போனால் என்ன ஆகும் என்பதற்கு உதாரணம்தான் இன்றைய அதிமுக. திமுகவுடன் சேர்ந்து ஆட்சி அமைக்கலாம் என்கிறார்கள். தொண்டர்களின் மனநிலையைப் பற்றி கவலைப்படவில்லை. உண்மையை எடுத்துச் சொல்பவர்களை துரோகிகள் என்கிறார் எடப்பாடி பழனிசாமி. நாங்கள் உருவாக்கிய பொதுச்செயலாளரின் தவறான முடிவுகளால் அதிமுக தள்ளாடுகிறது.

மாபெரும் அரசியல் மாற்றத்தை உருவாக்கியவர் முதல்-அமைச்சர் விஜய். விஜய் உருவாக்கியது ஒரு தலைமுறை மாற்றம். தமிழகத்தில் இல்லை, இந்தியாவில் அரசியல் புரட்சி ஏற்பட்டுள்ளது. எம்.ஜி.ஆர். போல இனி தமிழகத்தில் விஜய் ஆட்சிதான் தொடரும்.

நமது முதல்-அமைச்சர் இன்னும் ஓரிரு வாரங்களில் கரூர் வர இருக்கிறார். அந்த கரூர் நிகழ்ச்சியில் இன்னும் அலைகடலாக பல தொண்டர்களை அதில் இணைத்து, இந்த இயக்கம் தொடர்ந்து வெற்றி பெற உழைப்போம். இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து பேசிய சி.விஜயபாஸ்கர் கூறியதாவது:-

தேர்தலுக்கு முன் தவெகவுடன் கூட்டணி வைக்க அதிமுக தலைமையிடம் வலியுறுத்தினோம். தேர்தலுக்குப் பின் ஆதரவு தர வலியுறுத்தினோம். ஆனால் தலைமை கேட்கவில்லை. எல்லா தேர்தல்களிலும் இனி தவெக வெற்றி பெறும். உறுதியான ஒற்றை தலைமையில் பயணித்து வெற்றி வாகை சூடுவோம், பயணிப்போம், உழைப்போம்.

இங்கு பார்ப்பது வெறும் டிரெய்லர் தான். தலைமையின் ஆதரவோடு மெயின் பிக்சரை டெல்டா மாவட்டத்தில் காட்டுவோம். அங்கே மீண்டும் ஒரு பிரமாண்ட இணைப்பு விழா நடத்த தயாராக உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.