தமிழக செய்திகள்

சாலைகள் முதல் பள்ளிகள் வரை போதை புழக்கம் கட்டுக்கடங்காமல் அதிகரித்துள்ளது - அண்ணாமலை

தமிழகத்தில் செல்லும் இடமெல்லாம் மாற்றத்திற்கான காற்று வீசுவதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

சென்னை,

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு வருகிற 23-ந்தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தல் களத்தில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர் கட்சி, தவெக என 4 முனை போட்டி நிலவுகிறது. தேர்தலை முன்னிட்டு வேட்பாளர்கள் வீதி வீதியாக சென்று தீவிர வாக்கு வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களை ஆதரித்து அந்தந்த கட்சி தலைவர்களும், முக்கிய நிர்வாகிகளும் சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில், 10 தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து தமிழக முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலை இன்று பிரசாரம் மேற்கொண்டார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறப்பட்டிருப்பதாவது;-

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில், ஐந்தாண்டு கால திமுக ஆட்சியை இனியும் தொடர விடக்கூடாது என்ற உறுதியோடு வாக்களிக்க காத்திருக்கும் தமிழக மக்களின் ஒற்றை நம்பிக்கையாக இருக்கும் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் போட்டியிடும்,

வில்லிவாக்கம் தொகுதி அஇஅதிமுக வெற்றி வேட்பாளர் விஜயகுமார், எழும்பூர் தொகுதி அஇஅதிமுக வெற்றி வேட்பாளர் அபிஷேக் ரங்கசாமி, அண்ணாநகர் தொகுதி அஇஅதிமுக வெற்றி வேட்பாளர் கோகுல இந்திரா, மதுரவாயல் தொகுதி அஇஅதிமுக வெற்றி வேட்பாளர் பெஞ்சமின், அம்பத்தூர் தொகுதி பாமக வெற்றி வேட்பாளர் சேகர், சைதாப்பேட்டை தொகுதி அமமுக வெற்றி வேட்பாளர் செந்தமிழன், சோழிங்கநல்லலூர் தொகுதி அஇஅதிமுக வெற்றி வேட்பாளர் கே.பி.கந்தன்,

ஆலந்தூர் தொகுதி அஇஅதிமுக வெற்றி வேட்பாளர் சரவணன், பல்லாவரம் சட்டமன்ற தொகுதி இந்திய ஜனநாயக கட்சி வெற்றி வேட்பாளர் வெங்கடேசன், தாம்பரம் தொகுதி அஇஅதிமுக வெற்றி வேட்பாளர் சிட்லபாக்கம் ராஜேந்திரன் ஆகியோரை ஆதரித்து சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நடைபெற்ற பிரசார கூட்டங்களில் பங்கேற்று வாக்கு சேகரித்து உரையாற்றினேன்.

கடந்த 5 ஆண்டுகளாக, சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை கூட செய்து தர முடியாத கையாலாகாத ஆட்சியை திமுக நடத்தி முடித்திருக்கிறது. அடையாறு நதியை சுத்தப்படுத்துவதற்காக ரூ.1,500 கோடியை செலவு செய்திருப்பதாக கூறினார்கள். ஆனால், அடையாறு சுத்தமானதாக தெரியவில்லை. மழைநீர் தேங்காமல் இருக்க ரூ.4,000 கோடி செலவு செய்ததாக கூறினார்கள். ஆனால், ஒவ்வொரு மழைக்கும் சென்னை தத்தளிக்கும் நிலை தொடர்கிறது. நமது சென்னை சுத்தமாக, சுகாதாரமாக இருக்கிறதா? நாட்டிலேயே சுத்தமான 40 நகரங்கள் பட்டியலில் சென்னை மாநகரம் 38வது இடத்தில் இருக்கிறது. சென்னை அடுத்தகட்ட வளர்ச்சியை நோக்கி சென்றுள்ளதா? ஆனால், தேர்தல் நேரத்தில் சூப்பர் 6 என்ற பெயரில் மக்களை ஏமாற்ற புதிய வழியை பயன்படுத்துகிறது திமுக. ஊழல் செய்ய திட்டங்களை கொண்டு வரும் திமுகவை அடியோடு அகற்ற வேண்டிய தேர்தல் இது.

கடந்த 5 ஆண்டுகளாக, திமுகவை சேர்ந்த நிர்வாகிகள் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களை விற்றதையும், சர்வதேச அளவில் கடத்தியதையும் நாம் பார்த்தோம். சாலைகள் முதல் பள்ளிகள் வரை போதை புழக்கம் கட்டுக்கடங்காமல் அதிகரித்துள்ளது.மீண்டும் திமுக ஆட்சி அமைந்தால், சட்டமன்ற தொகுதிகள் தோறும் கஞ்சா விற்பனை செய்ய திமுகவினர் தயங்கமாட்டார்கள். அதை நன்கு அறிந்ததால் தான், திமுக மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது என்ற உறுதியோடு தமிழக மக்கள் வாக்களிக்க காத்திருக்கிறார்கள்.

பல்லாவரம் பகுதியில் குடிநீரில், கழிவுநீர் கலந்து சுமார் 30 பேர் உயிரிழந்த அவலத்தை கண்டோம். பல்லாவரம் திமுக எம்.எல்.ஏ கருணாநிதி தனது வீட்டில் பணியாற்றிய பட்டியலின சகோதரிக்கு குடும்பத்துடன் சேர்ந்து என்னென்ன கொடுமைகளை செய்தார்கள் என்பதை தமிழகமே அதிர்ச்சியோடு பார்த்தது. இப்படி தமிழகத்தின் பெண்கள், விவசாயிகள், பட்டியலின மக்கள் என அனைத்து சமூகத்தினருக்கும் எதிரான சமூகவிரோத திமுக ஆட்சிக்கு முடிவு கட்டவேண்டியது காலத்தின் கட்டாயம்.

தமிழகத்தில் செல்லும் இடமெல்லாம் மாற்றத்திற்கான காற்று வீசுகிறது. தீயசக்தி திமுகவின் ஆட்சியை வேரோடும், வேரடி மண்ணோடும் பிடுங்கி எரிந்து, தமிழகத்தை மீட்டெடுத்து உண்மையான வளர்ச்சி பாதையில் கொண்டு செல்ல, தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் மக்கள் வெற்றிபெற செய்வார்கள் என்பதில் சந்தேகமில்லை. தேசிய ஜனநாயகக் கூட்டணி வெல்லட்டும்! வளர்ச்சியடைந்த தமிழகம் மலரட்டும்!

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.