சேலம்,
சேலம் மாவட்டம் மேச்சேரி அருகே இருசாக்கவுண்டனூர் பகுதியை சேர்ந்தவர் சந்திரசேகர். இவருக்கு 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். இதில் மூத்த மகள் காவியா (15 வயது) மேச்சேரியில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து முடித்து உள்ளார். இவர் தேர்வில் குறைவான மதிப்பெண்கள் எடுத்துள்ளார்.
இதனால் மாணவியின் பெற்றோர் அருகில் உள்ள குள்ளமுடையானூர் அரசு பள்ளியில் காவியாவை 11-ம் வகுப்பில் சேர்த்துள்ளனர். இந்த நிலையில் மாணவி காவியா சக தோழிகள் படிக்கும் பள்ளியில் சேர்க்காமல் வேறு பள்ளியில் சேர்த்ததால் விரக்தியில் மனமுடைந்து சோர்வாக இருந்துள்ளார்.
இதனிடையே கடந்த 24-ந்தேதி வீட்டில் யாரும் இல்லாதபோது காவியா விஷம் குடித்து மயங்கி கிடந்தார். இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக ஓமலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்று, மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
ஆனால் அங்கு சிகிச்சை பெற்று வந்த மாணவி சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார். இந்த சம்பவம் குறித்து மேச்சேரி போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.