கோப்புப்படம் 
தமிழக செய்திகள்

அரசு கல்லூரியில் இடம் கிடைக்காததால் விரக்தி - மாணவி எடுத்த விபரீத முடிவு

பிளஸ்-2 பொதுத்தேர்வில் குறைந்த மதிப்பெண்கள் பெற்றிருந்ததால் மாணவிக்கு அரசு கல்லூரியில் இடம் கிடைக்கவில்லை.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் ஜூஜூவாடி பகுதியை சேர்ந்தவர் சின்னசாமி, கூலித் தொழிலாளி. இவரது மகள் பூஜா (17 வயது). இவர் பிளஸ்-2 பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்தார். இதையடுத்து ஓசூர் அரசு கலைக்கல்லூரியில் சேர விண்ணப்பித்து இருந்தார். ஆனால் அவர் குறைந்த மதிப்பெண்கள் பெற்றிருந்ததால் கல்லூரியில் இடம் கிடைக்கவில்லை என கூறப்படுகிறது.

இதனால் மனமுடைந்த மாணவி நேற்று முன்தினம் வீட்டில் மின்விசிறியில் துப்பட்டாவால் தூக்குப்போட்டு கொண்டார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவரது தங்கை பிரியா அலறி சத்தம் போட்டார். அவரது சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தினர் மற்றும் உறவினர்கள் வந்து பூஜாவை மீட்டு ஓசூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி பூஜா பரிதாபமாக உயிரிழந்தார். இகுறித்து சிப்காட் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அரசு கல்லூரியில் இடம் கிடைக்காத விரக்தியில் மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.