தமிழக செய்திகள்

அமோனியா வாயு கசிவு நடந்த ஆலையில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் நேரில் ஆய்வு

அமோனியா வாயு கசிவு விபத்தில் 11 பேர் உயிரிழந்துள்ளனர்.

சென்னை,

அமோனியா வாயு கசிவு

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அடுத்த கன்னிகைப் பேர் கிராமத்தில் புனித பீட்டர் பால் கடல் உணவு பொருள்களை பதப்படுத்தி ஏற்றுமதி செய்யும் தனியார் நிறுவனத்தில் கடந்த 21-ந்தேதி அமோனியா வாயு கசிவு விபத்து ஏற்பட்டது.

இதில் 74 வடமாநில தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டு 2 தனியார் மற்றும் 2 அரசு ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். மற்றவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

FSSAI ஆய்வு

இந்த நிலையில், திருவள்ளூர் அமோனியா வாயு கசிவு விபத்து நடந்த ஆலையில் (FSSAI) இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணைய அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து வருகின்றனர். விபத்து நடந்த இடம், ஆலையில் கட்டமைப்பு குறித்து ஆய்வு செய்து வருகின்றனர்.

உணவு மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் ஆய்வக முடிவுகளின் அடிப்படையில் ஆலை மீது ஒழுங்குமுறை நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

விபத்தின்போது வளாகத்தில் 270 மெட்ரிக் டன் கடல் உணவுகள் இருந்தன. உணவுப் பொருட்களின் பாதிப்பை மதிப்பிட உடனடியாக கூட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அசுத்தமான 13 மெட்ரிக் டன் கடல் உணவுகள் அப்புறப்படுத்தப்படுகின்றன என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.