சென்னை,
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-
மேற்காசிய போர்ச்சூழல் காரணமாக, தற்போது ஏற்பட்டிருக்கும் நெருக்கடிகளை எதிர்கொள்ள, இரண்டு நாட்களுக்கு முன்பு உயர்மட்ட ஆலோசனை மேற்கொண்டதோடு, சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு - பெட்ரோல் - டீசல் உள்ளிட்ட எரிபொருள் விநியோகம் குறித்து பிரதமர் அவர்களுக்கும், தொடர்புடைய மத்திய அமைச்சர்களுக்கும் கடிதம் எழுதியுள்ளேன்.
உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி அவர்கள் தலைமையில், எரிவாயு தட்டுப்பாட்டை எதிர்கொள்வது குறித்த ஆலோசனைக் கூட்டமும் நேற்று நடைபெற்றுள்ளது.
இவ்விவகாரத்தில் மத்திய அரசு மேலும் தீவிரமாகக் கவனம் செலுத்திட நாடாளுமன்ற வளாகத்திலும் எதிர்க்கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளோம்.
போதுமான எரிபொருள் கையிருப்பில் உள்ளதாக மத்திய அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டு வரும் நிலையில், பொதுமக்கள் யாரும் அச்சப்படவோ பதற்றம் கொள்ளவோ வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறேன். இந்நேரத்தில் மத்திய அரசு மேற்கொண்டு வரும் முயற்சிகளுக்குத் துணை நின்று மேற்காசிய போர்ச்சூழலை எதிர்கொள்வோம்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.