திருவண்ணாமலை,
கிரிவலம் செல்வதற்காக பக்தர்கள் பஸ்களிலும், ரெயில்களிலும் கூட்டம், கூட்டமாக வந்தனர்.
திருவண்ணாமலையில் மலையையே சிவனாக வழிபடுவதால் அருணாசலேஸ்வரர் கோவில் பின்புறம் உள்ள மலையை சுற்றி பவுர்ணமி நாட் களில் லட்சக்கணக்கான பக்தர்கள் 14 கிலோ மீட்டர் தூரம் கொண்ட கிரிவலப்பாதையில் நடந்தே கிரிவலம் செல்கின்றனர். இந்த நிலையில் ஆவணி மாதத்திற்கான பவுர்ணமி நேற்று காலை 9.52 மணிக்கு தொடங்கியது.
பவுர்ணமியை முன்னிட்டு நேற்று காலை முதல் ஏராளமான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வந்து கிரிவலம் செல்லத்தொடங்கினர். பகலில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் கிரிவலம் சென்ற பக்தர்களின் கூட்டம் குறைந்து காணப்பட்டது. பின்னர் மாலையில் பக்தர்கள் கூட்டம் அதிகரிக்க தொடங்கியது.
குறிப்பாக ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த பக்தர்கள் அதிகளவில் வந்திருந்தனர். முன்னதாக நேற்று காலை முதல் அருணாசலேஸ்வரர் கோவிலில் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். கோவிலில் பக்தர்கள் விரைந்து சாமி தரிசனம் செய்யும் வகையில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. மாலையில் கிரிவலம் செல்வதற்காக பக்தர்கள் பஸ்களிலும், ரெயில்களிலும் கூட்டம், கூட்டமாக வந்தனர்.
இதனால் இரவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்றனர். கிரிவலம் சென்ற பக்தர்களுக்கு ஆங்காங்கே அன்னதானம் வழங்கப்பட்டது. பவுர்ணமி கிரிவலம் இன்று காலை 10.59 மணிக்கு நிறைவடைந்தது. இதனால் பக்தர்கள் தொடர்ந்து விடிய, விடிய கிரிவலம் சென்றனர். மாவட்ட நிர்வாகத்தின் மூலம் கிரிவலம் செல்லும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு இருந்தது.
மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உதயகுமார் தலைமையில் போலீசார் தொடர்ந்து ரோந்து மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அத்துடன் சிங்கப்பெண் அதிரடிப்படையினர் கிரிவலப்பாதையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். தற்காலிக பஸ் நிலையங்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது.
மேலும் சிறப்பு ரெயில்களும் இயக்கப்பட்டன. இதனை பயன்படுத்தி கிரிவலம் சென்ற பக்தர்கள் தங்கள் பகுதிக்கு எந்தவித சிரமமுமின்றி திரும்பி சென்றனர்.