தமிழக செய்திகள்

மசினகுடியில் முழு வேலைநிறுத்தம்: கடைகள் அடைப்பு

மசினகுடியில் இருந்து ஊட்டிக்கு சுற்றுலா பயணிகளின் வாகனங்கள் இயக்கப்பட்டு வந்தது.

ஊட்டி,

கர்நாடகா மாநிலம் மைசூருவில் இருந்து முதுமலை புலிகள் காப்பகம் வழியாக மசினகுடிக்கும், கூடலூருக்கும் சாலை செல்கிறது. இதில் மசினகுடியில் இருந்து கல்லட்டி மலைப்பாதை வழியாக ஊட்டிக்கு கொண்டை ஊசி வளைவு கொண்ட சாலை செல்கிறது.

கடந்த காலங்களில் ஊட்டியில் இருந்து கல்லட்டி வழியாக மசினகுடிக்கு சுற்றுலா பயணிகளின் வாகனங்கள் இயக்கும்போது விபத்துகள் ஏற்பட்டு வந்தது. இதனால் பலர் உயிரிழந்தனர். இதைத்தொடர்ந்து ஊட்டியில் இருந்து கல்லட்டி மலைப்பாதை வழியாக மசினகுடிக்கு வாகனங்களை இயக்க தடை விதிக்கப்பட்டது. ஆனால் மசினகுடியில் இருந்து ஊட்டிக்கு சுற்றுலா பயணிகளின் வாகனங்கள் இயக்கப்பட்டு வந்தது.

வாகன விபத்துகள் அதிகரித்து வருவதாக நீதிமன்றம் உத்தரவின் அடுத்து, கடந்த 1-ந் தேதி முதல் சுற்றுலா வாகனங்கள் செல்ல மாவட்ட நிர்வாகம் தடை விதித்தது. இதனால் மசினகுடியில் இருந்து ஊட்டிக்கு சுற்றுலா வாகனங்கள் இயக் கப்படாததால் பயணிகள் கூடலூர் வழியாக பயணம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால், மசினகுடி ஊராட்சி மக்கள் கல்லட்டி மலைப்பாதை வழியாக சென்று வர கட்டுப்பாடு விதிக்கவில்லை.

இந்தநிலையில் மசினகுடியில் இருந்து ஊட்டிக்கு செல்லும் மலைப்பாதையில் சுற்றுலா பயணிகளின் வாகனங்களை அனுமதிக்கக் கோரி மசினகுடி ஊராட்சியில் இன்று முழு வேலைநிறுத்த போராட்டம் நடைபெற்று வருகிறது. இதனால் ஏராளமான சவாரி வாகங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. நகரின் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டுள்ளதால் சாலைகள் வெறிச்சோடி காணப்படுகிறது. மேலும் மக்கள் கூடும் இடங்களில் கூட்டம் இல்லாமல் காணப்பட்டது.

இதுகுறித்து வியாபாரிகள், வாகன ஓட்டிகள் உள்பட பல்வேறு தரப்பினரும் கூறும்போது, சுற்றுலா பயணிகளின் வாகனங்க ளுக்கு தடை விதிப்பதால் வணிக ரீதியாக மசினகுடி பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் சுற்றுலா பயணிகள் வருகை குறைந்துள்ளதால் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது என்றனர்.