சென்னை,
ஓவிய, சிற்பக் கலைஞர்களின் திறமையை வெளிப்படுத்த தமிழக அரசு நிதியுதவி வழங்கி வருகிறது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
தமிழ்நாடு அரசின் சார்பில், கலை பண்பாட்டுத் துறை, தமிழ்நாடு ஓவிய நுண்கலைக்குழுவின் மூலம், தமிழ்நாட்டிலுள்ள ஓவிய சிற்பக் கலைஞர்களின் கலைத் திறமைகளை வெளிப்படுத்த அவர்களது கலைப் படைப்புகள் அடங்கிய கலைக் காட்சியினை தனிநபர் கலைக் காட்சியாக நடத்திட ஒரு நபருக்கு ரூ.25,000/- வீதம் 10 கலைஞர்களுக்கும் மற்றும் ஒன்றுக்கு மேற்பட்ட கலைஞர்கள் இணைந்து கூட்டாக கூட்டுக் கலைக்காட்சியாக நடத்திட ஒரு குழுவுக்கு ரூ.50,000/- வீதம் 5 குழுக்களுக்கும் அரசின் நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது. தகுதி வாய்ந்த ஓவிய சிற்பக் கலைஞர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விண்ணப்பதாரர்கள் மாநில அளவிலோ அல்லது தேசிய அளவிலோ நடைபெற்ற கலைக்காட்சிகளில் பங்கு கொண்டவர்களாகவும், நுண்கலைகளில் ஈடுபாடு கொண்டவர்களாகவும் இருத்தல் வேண்டும். கலை பண்பாட்டுத் துறை - ஓவிய நுண்கலைக் குழுவின் கலைச்செம்மல் விருது பெற்றவர்கள் கலையமைப்புகள் பெயரில் கலைக்காட்சி நடத்த விரும்புபவர்கள், தற்போது நுண்கலை பயின்று வரும் மாணவர்கள் இத்திட்டத்தின்கீழ் விண்ணப்பிக்கக் கூடாது. இதற்கு முன் இத்திட்டத்தில் பயனடைந்தோர் இத்திட்டத்தின்கீழ் விண்ணப்பிக்கக்கூடாது.
விண்ணப்பதாரர்கள் தங்களுடைய புகைப்படத்துடன் கூடிய தன் விவரக் குறிப்பு (Bio Data), கைபேசி எண். (Cell No.) சிறந்த படைப்புகளின் புகைப்படங்கள் 5 எண்ணிக்கைகள் (A4 Size) அவரவர்கள் படைப்புத் திறன் பற்றிய செய்தித் தொகுப்புகள் அடங்கிய விவரங்களை இணைத்து பின்வரும் முகவரிக்கு 01.10.2026 க்குள் அனுப்பி வைத்திட கேட்டுக்கொள்ளப்படுகிறது. (இணைப்புகள் இல்லாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்)
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.