தமிழ்த் திரையுலகில் புகழ்பெற்ற இசையமைப்பாளரும் பாடகருமான தேவா சென்னையில் இன்று காலமானார். அவருக்கு வயது 75. இன்று காலை திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டதால், தேவா உடனடியாக தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே அவர் இறந்துவிட்டதாகக் கூறினர். மனசுக்கேத்த மகராஜா என்ற திரைப்படத்தின் மூலம், 1986ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் தேவா.
தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் 400க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார் தேவா. இசை உலகில் தனக்கென தனி சாம்ராஜ்யம் நடத்தி வந்த தேவா மறைவுக்கு அரசியல், திரைப்பிரபலங்கள் உள்பட பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.
இந்த நிலையில், தேவா உடலுக்கு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு நடைபெறும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இசை உலகிற்கு ஆற்றிய சேவையை கவுரவிக்கும் வகையில் அரசு மரியாதை வழங்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.