கோயம்புத்தூர்,
இஸ்ரோவின் ‘ககன்யான்’ திட்டத்திற்கான ‘க்ரூ எஸ்கேப் சிஸ்டம்’ என்ற பாதுகாப்பு அமைப்பை எல் அண்டு டி நிறுவனத்தின் கோயம்புத்தூர் கிளை தயாரித்துள்ளது.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) அடுத்த ஆண்டு மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும், 'ககன்யான்' திட்டத்தை செயல்படுத்த இலக்கு நிர்ணயித்துள்ளது. இதற்காக, நான்கு வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். விண்வெளியில் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது தொடர்பான பயிற்சிகள் அவர்களுக்கு அளிக்கப்பட்டு வருகின்றன.
‘ககன்யான்’ திட்டத்திற்குத் தேவையான பல்வேறு முக்கிய பாகங்களை எல் அண்டு டி நிறுவனம் தயாரித்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, விண்கலத்தில் அவசர நிலை ஏற்பட்டால், விண்வெளி வீரர்கள் பாதுகாப்பாக வெளியேற உதவும் ‘க்ரூ எஸ்கேப் சிஸ்டம்’ என்ற பாதுகாப்பு அமைப்பை எல் அண்டு டி நிறுவனத்தின் கோயம்புத்தூர் கிளை தயாரித்துள்ளது. இந்த அமைப்பு கடந்த வாரம் இஸ்ரோவிடம் ஒப்படைக்கப்பட்டது.
இதுகுறித்து அந்நிறுவன அதிகாரிகள் கூறுகையில், “ககன்யான்-1, ககன்யான்-2 திட்டங்களுக்காக பிட்ச் மோட்டார் கம்பார்ட்மென்ட், க்ரூ மாட்யூல், லாஞ்ச் எஸ்கேப் சிஸ்டம் கட்டமைப்பு, த்ரஸ்ட் டிரான்ஸ்பர் ஸ்ட்ரக்சர்ஸ் உள்ளிட்ட பல்வேறு பாகங்களை தயாரித்துள்ளோம். கோவையில் இதுவரை 4 க்ரூ எஸ்கேப் பாகங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன” என்று தெரிவித்தனர்.