தமிழக செய்திகள்

விநாயகர் சதுர்த்தி பண்டிகை: ரசாயன வர்ணம் பூசப்பட்ட சிலைகளுக்கு அனுமதி இல்லை மாசு கட்டுப்பாடு வாரியம் உத்தரவு

ரசாயன வர்ணம் பூசப்பட்ட விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் கரைக்க அனுமதி இல்லை என்று தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

விநாயகர் சதுர்த்தி பண்டிகை அடுத்த மாதம் 2-ந் தேதி (திங்கட்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சுற்றுச்சூழல் பாதுகாப்பில் மக்களாகிய நமக்கு மிகப்பெரிய கடமை இருக்கிறது. நீர்நிலைகள் (கடல், ஆறு-குளம்), நமக்கு குடிநீர் ஆதாரத்தை தருகிறது.

நீர்நிலைகளை பாதுகாக்கும் வகையில் வருகிற விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாடும்போது, விநாயகர் சிலைகளை மாவட்ட நிர்வாகத்தினால் குறிப்பிடப்பட்டுள்ள இடங்களில் மட்டும் கரைத்து சுற்றுச்சூழலை பாதுகாக்க ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

* களிமண்ணால் செய்யப்பட்டதும், சுடப்படாததும் மற்றும் எந்தவித ரசாயன கலவையற்றதுமான கிழங்கு மாவு மற்றும் மரவள்ளிக்கிழங்கில் இருந்து தயாரிக்கும் ஜவ்வரிசி தொழிற்சாலை கழிவுகள் போன்ற சுற்றுச்சூழலை பாதிக்காத மூலப் பொருட்களால் மட்டுமே செய்யப்பட்டதுமான விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் பாதுகாப்பான முறையில் கரைக்க அனுமதிக்கப்படும்.

* நீரில் கரையும் தன்மையுடைய மற்றும் தீங்கு விளைவிக்காத இயற்கை வர்ணங்களுடைய விநாயகர் சிலைகளை உபயோகிக்க வேண்டும். ரசாயன வர்ணம் பூசப்பட்ட விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் கரைக்க அனுமதிக்கப்பட மாட்டாது.

விநாயகர் சதுர்த்தி விழாவை சுற்றுச்சூழலை பாதிக்காதவாறு பொதுமக்கள் கொண்டாட வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு மாவட்ட கலெக்டர்கள், போலீஸ் சூப்பிரண்டு மற்றும் சுற்றுச்சூழல் பொறியாளர் ஆகியோரை அணுகலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT