சென்னை,
கொரோனா ஊரடங்கால், இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, பொது இடங்களில் விநாயகர் சிலை வைக்கவும், அதை ஊர்வலமாக எடுத்துச்சென்று நீர்நிலைகளில் கரைக்கவும் தமிழக அரசு தடை விதித்தது. இந்த தடையை நீக்க கோரி சென்னை ஐகோர்ட்டில், கணபதி, ராதாகிருஷ்ணன் ஆகியோர் தனித்தனியாக வழக்குகளை தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆர்.ஹேமலதா ஆகியோர் தடையில் தளர்வுகள் ஏதேனும் வழங்க முடியுமா? என்று தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதில் அளித்து அட்வகேட் ஜெனரல் விஜய்நாராயண், சிலைகளை வீட்டின் முன்பு வைத்து, வணங்கி நீர்நிலைகளில் கரைக்க தனி நபர்களுக்கு தடை இல்லை. ஆனால் அமைப்புகளுக்கு தடை உண்டு என்று விளக்கம் அளித்தார். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், தனிநபர்கள் விநாயகர் சிலைகளை வீட்டில் வைத்து வழிபடலாம். அந்த சிலைகளை கோவில்களின் முன்பு வைத்து செல்லலாம் அல்லது நீர்நிலைகளில் கரைக்கவும் செய்யலாம். எந்த ஒரு அமைப்புகள் சார்பிலும், விநாயகர் சிலைகளை வைக்கவும், ஊர்வலம் செல்லவும் அனுமதி இல்லை. இதை மீறுவோருக்கு எதிராக அரசு தகுந்த நடவடிக்கைகளை எடுக்கலாம். அதேபோல தனிநபர்கள் சென்னையில் மெரினா கடற்கரையை தவிர்த்து பிற நீர்நிலைகளில் சிலைகளை கரைக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
இந்த நிலையில், இந்த உத்தரவில் சில சந்தேகங்களை தெளிவுபடுத்த வேண்டும் என்றும் நீதிபதிகளிடம் அட்வகேட் ஜெனரல் முறையிட்டார். இதன்படி இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரிக்கப்பட்டது. அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயண் ஆஜராகி, வீடுகளில் சிலை வைத்து வழிபட்ட பின்னர் அதை வீட்டின் முன்பு வைக்கலாம் என்று நேற்று முன்தினம் உத்தரவிடப்பட்டது. அதற்கு பதில் அருகில் உள்ள கோவில்களிலும் வைக்கலாம் என்று உத்தரவிட வேண்டும். அவ்வாறு வைக்கப்படும் சிலைகளை அறநிலையத்துறை சார்பில் நீர்நிலைகளில் கரைக்கும் என்று கூறினார்.
இதற்கு மனுதாரர்கள் தரப்பு வக்கீல்கள் ஆட்சேபனை தெரிவிக்கவில்லை. இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், தமிழகத்தில் சிறு கோவில்கள் எல்லாம் திறக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் விநாயகர் சிலைகளை வழிப்பட்ட பின்னர், அருகில் உள்ள சிறு கோவில்கள் முன்பு சிலைகளை வைத்து செல்லலாம். அந்த சிலைகளை இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் எடுத்து அவற்றை நீர்நிலைகளில் கரைக்கும் என்று நேற்று முன்தினம் பிறப்பித்த உத்தரவில் மாற்றம் செய்து உத்தரவிட்டனர்.