வேலூர்,
ஓரினச்சேர்க்கை செயலி மூலம் அழைத்து வாலிபரிடம் 'ஜிபே' மூலம் பணம் பறித்த 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் பகுதியை சேர்ந்தவர் ஏழுமலை (23 வயது). இவர் மூவரசம்பட்டில் தங்கி, அங்குள்ள பேக்கரியில் வேலை பார்த்து வருகிறார். இவர் பழவந்தாங்கல் போலீசில் அளித்த புகாரில், வேனில் வந்த 5 பேர் தன்னை மிரட்டி, ரூ.25 ஆயிரத்தை 'ஜிபே' மூலம் பறித்துச் சென்றதாக தெரிவித்திருந்தார்.
இதுகுறித்து பரங்கிமலை போலீஸ் துணை கமிஷனர் சீனிவாசன் உத்தரவின்பேரில், உதவி கமிஷனர் பசுபதி மற்றும் பழவந்தாங்கல் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் சத்தியலிங்கம் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், ஏழுமலை ஓரினச்சேர்க்கைக்கான செயலி மூலம் பெருங்குடியை சேர்ந்த வேன் டிரைவர் அய்யனார் (23 வயது) என்பவரை தொடர்பு கொண்டது தெரியவந்தது. தனியாக சந்திக்கலாம் என்று அய்யனார் கூறியதை தொடர்ந்து, ஏழுமலை நேற்று முன்தினம் இரவு அவரை சந்திக்க சென்றுள்ளார்.
அப்போது வேனில் அய்யனாருடன் அவரது நண்பர்களான பெருங்குடியை சேர்ந்த பால் வியாபாரி கோகுலகிருஷ்ணன் (24 வயது), ஆன்லைன் பொருட்கள் டெலிவரி செய்யும் ஹரிஹரன் (24 வயது). வேளச்சேரியை சேர்ந்த செல்வம் (19 வயது), திருமுல்லைவாயலை சேர்ந்த பால் வியாபாரி மதன்குமார் (24 வயது) ஆகியோர் இருந்துள்ளனர்.
ஏழுமலையை கண்டதும், அவரது தனிப்பட்ட விஷயத்தை பெற்றோரிடம் தெரிவித்துவிடுவதாக கூறி, பணம் கொடுத்தால் விட்டுவிடுவோம் என்று 5 பேரும் மிரட்டியதாக கூறப்படுகிறது. இதனால் பயந்துபோன ஏழுமலை, அவர்களிடம் ரூ.25 ஆயிரத்தை 'ஜிபே' மூலம் அனுப்பினார். பணத்தை பெற்றுக்கொண்ட 5 பேரும் அவரை வேனில் இருந்து இறக்கிவிட்டு தப்பிச்சென்றது விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து ஏழுமலையை மிரட்டி பணம் பறித்ததாக வேன் டிரைவர் அய்யனார் மற்றும் அவரது நண்பர்கள் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.