தமிழக செய்திகள்

புதுக்கோட்டையில் மாற்றுத் திறனாளி பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை - 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கூட்டு பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக மாரிமுத்து மற்றும் சேகர் ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர்.

புதுக்கோட்டை,

கடந்த மே மாதம் 17-ந்தேதி, புதுக்கோட்டை மாவட்டம் மழையூர் அருகே ஆளங்குடியில் வாய் பேச முடியாத மாற்று திறனாளி பெண் ஒருவர், பணி முடிந்து வீடு திரும்பும்போது 2 நபர்களை அவரை காரில் கடத்தி பாலியல் வன்கொடுமை செய்து சாலையோரம் இறக்கிவிட்டுச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திய மகளிர் போலீசார், முதலில் மாரிமுத்து என்பவரை கைவி செய்தனார். இதனை தொடர்ந்து மறுநாள் 19-ந்தேதி தனிப்படை போலீசார் திண்டுக்கலில் தலைமறைவாக இருந்த சேகர் என்பவரை கைது செய்து இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

கைது செய்யப்பட்ட 2 பேர் மீதும் குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட கலெக்டருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பரிந்துரை செய்தார். இதன் அடிப்படையில் மாரிமுத்து மற்றும் சேகர் ஆகிய 2 பேரையும் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்ட கலெக்டர் அருணா இன்று உத்தரவிட்டுள்ளார்.