தமிழக செய்திகள்

இளம்பெண்ணுக்கு கூட்டு பாலியல் தொல்லை: 3 பேருக்கு தலா 20 ஆண்டுகள் சிறை

தஞ்சை மாவட்டம், திருபுவனத்தில் ஒருவர், ஒரு இளம்பெண்ணை தனது வீட்டுக்கு அழைத்துச் சென்று, குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

தஞ்சாவூர்,

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே இளம்பெண்ணுக்கு கூட்டு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் 3 பேருக்கு தலா 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தஞ்சை மகிளா கோர்ட்டு தீர்ப்பளித்தது.

இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள திருபுவனத்தில் ஒரு ஜவுளிக்கடையில் 21 வயது இளம்பெண் வேலை செய்து வந்தார். அவரை கடந்த 7.11.2018 அன்று, அதே பகுதியில் கடை நடத்தி வரும் சின்னப்பா (வயது 42) என்பவர் தனது வீட்டில் மனைவி இல்லாத நேரத்தில் அழைத்துச் சென்று குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.

பாதிக்கப்பட்ட பெண் மறுநாள் கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு தனது தாயுடன் சென்று டாக்டர்களிடம் தனக்கு அதிகளவு ரத்த போக்கு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார். டாக்டர்கள் பரிசோதித்ததில் அந்த பெண் கடுமையாக பாலியல் தொல்லைக்கு ஆளாகியது தெரியவந்தது.

கூட்டு பாலியல் தொல்லை

அப்போது இளம்பெண்ணின் தாய், மகளிடம் டாக்டர்கள் விசாரித்ததில் தந்தை இறந்தபோது உதவி செய்து நண்பராக பழகி வந்த சின்னப்பா தனது வீட்டுக்கு உணவு அருந்த வருமாறு அழைத்துச் சென்று குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிவித்தார். மேலும் சின்னப்பா மற்றும் இளம்பெண் வேலை பார்க்கும் ஜவுளி கடை உரிமையாளரான கார்த்திக்(29), சின்னப்பாவின் நண்பரான மைதீன்(38) ஆகிய 3 பேரும் சேர்ந்து அந்த பெண்ணுக்கு கூட்டு பாலியல் தொல்லை கொடுத்துள்ளதாகவும் தெரிவித்தார்.

3 பேர் கைது

இதுகுறித்து கும்பகோணம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து சின்னப்பா, கார்த்திக், மைதீன் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். இதையடுத்து பாதிக்கப்பட்ட பெண்ணின் தாய், மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்து இந்த வழக்கை உரிய முறையில் விசாரிக்க வேண்டுமெனில் சி.பி.சி.ஐ.டிக்கு மாற்ற வேண்டும் என மனு தாக்கல் செய்தார்.

மனுவை விசாரித்த நீதிமன்றம் கடந்த 2019-ம் ஆண்டு ஜனவரி மாதம் வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி பாதிக்கப்பட்ட பெண்ணுக்கும், குடும்பத்தினருக்கும் உரிய போலீஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என உத்தரவிட்டது. இதன் தொடர்ச்சியாக இந்த வழக்கு பெண்களுக்கு எதிரான குற்றங்களை விசாரிக்கும் தஞ்சை மகிளா சிறப்பு கோர்ட்டில் நடந்து வந்தது.

20 ஆண்டுகள் சிறை

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி தீபா, நேற்று குற்றம் சாட்டப்பட்ட சின்னப்பா, மைதீன், கார்த்திக் ஆகிய 3 பேருக்கும் தலா 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா ரூ.50 ஆயிரம் நஷ்ட ஈடாக பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார். கும்பகோணம் அருகே இளம்பெண்ணுக்கு கூட்டு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் 3 பேருக்கு தலா 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

SCROLL FOR NEXT