மதுரை,
மதுரை அவனியாபுரம் அருகே கோவில் திருவிழா முன் விரோதத்தில் பட்டப்பகலில் வாலிபர் ஒருவர் ஓட, ஓட விரட்டி வெட்டிக்கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மதுரை அவனியாபுரம் அருகே மாநகராட்சி காலனி 2-வது பிளாக் பகுதியை சேர்ந்தவர் பாலாஜி (வயது 30). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். ஆறுமுக நகர் பகுதியை சேர்ந்தவர் ராஜா உசேன் (33). இருவரும் நண்பர்கள். இந்தநிலையில், நேற்று மதியம் பாலாஜி மற்றும் ராஜாஉசேன் ஆகிய இருவரும் மாநகராட்சி காலனி பகுதியில் உள்ள குடிநீர் தொட்டி அருகே நின்று பேசிக் கொண்டிருந்தனர். அப்போது 5 பேர் கொண்ட கும்பல் அங்கு வந்தது. அந்த கும்பல் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் வந்தனர்.
அவர்கள் வெட்டியதில் ராஜாஉசேன் பலத்த காயம் அடைந்து கீழே விழுந்தார். சுதாரித்து கொண்ட பாலாஜி, அந்த கும்பலிடம் இருந்து தப்பித்து ஓடினார். இருப்பினும் அந்த கும்பல் அவரை விடாமல் பின் தொடர்ந்து துரத்தி சென்று, 3-ம் பிளாக் பகுதியில் வைத்து சுற்றி வளைத்தது. அதன்பின்னர் தாங்கள் வைத்திருந்த அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் சரமாரியாக பாலாஜியை வெட்டிவிட்டு அந்த கும்பல் அங்கிருந்து தப்பி சென்றது.
இதில் ரத்த வெள்ளத்தில் பாலாஜி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பட்டப்பகலில் ஆட்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் அரங்கேறிய கொலையால் அங்கிருந்தவர்கள் அலறினர். இந்த சம்பவம் குறித்து அக்கம் பக்கத்தினர் அவனியாபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், உயிருக்கு போராடிய ராஜாஉசேனை சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், பாலாஜியின் உடலை மீட்டு பரிசோதனைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
கொலை நடந்த சம்பவ இடத்திற்கு மோப்பநாய் வரவழைக்கப்பட்டு, சிறிது தூரம் சென்று நின்றது. தடயவியல் துறை நிபுணர்களும் சம்பவ இடத்தில் ஆய்வு செய்தனர். இதற்கிடையே, கொலை சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்த மாநகர போலீஸ் துணை கமிஷனர் இனிகோ திவ்யன் நேரில் விசாரணை நடத்தினார்.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், சில வாரங்களுக்கு முன்பு அந்த பகுதியில் கோவில் திருவிழா நடந்துள்ளது. அப்போது பாலாஜி தரப்பினருக்கும், வில்லாபுரம் பகுதியை சேர்ந்த ஒரு தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு மோதலாக மாறி உள்ளது. இந்த முன்விரோதம் காரணமாக, பாலாஜியை கொலை செய்ய திட்டமிட்டனர்.
அதன்படி, நேற்று அந்த பகுதியில் நின்று கொண்டிருந்த பாலாஜியை கொலை செய்துள்ளனர். அதனை தடுக்க வந்த ராஜாஉசேனுக்கும் வெட்டு விழுந்தது. கோவில் திருவிழாவில் ஏற்பட்ட முன்விரோத தகராறில்தான் இந்த கொலை சம்பவம் அரங்கேறி உள்ளதாக கூறப்படுகிறது. இதில் தொடர்புடைய 5 பேரை பிடித்து விசாரித்து வருகிறோம் என போலீசார் தெரிவித்தனர்.