தமிழக செய்திகள்

சென்னை விமான நிலையத்தில் ரூ.5.26 கோடி மதிப்பிலான கஞ்சா பறிமுதல்..!

போதைப்பொருளை பறிமுதல் செய்த அதிகாரிகள், அதை கடத்தி வந்த வாலிபரை கைது செய்தனர்.

சென்னை,

சென்னை சர்வதேச விமான நிலையம் வழியாக வெளிநாடுகளில் இருந்து பெருமளவில் போதைப்பொருட்கள் கடத்தி வரப்படுவதாக சுங்கத்துறை நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து விமான நிலையத்தில் அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.

பாங்காக்கில் இருந்து வந்த பயணி மீது சந்தேகம்

இந்த நிலையில், தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இருந்து சென்னை வந்த விமானத்தில் பயணம் செய்தவர்களை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

அப்போது சுமார் 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர், தனது சூட்கேஸுடன் சுங்கச் சோதனை பகுதியில் நிற்காமல் அவசரமாக வெளியேற முயன்றதாக கூறப்படுகிறது. இதனால் சந்தேகமடைந்த அதிகாரிகள் அவரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.

சூட்கேஸில் 26 பாக்கெட்டுகள்

அவரது சூட்கேஸை திறந்து சோதனை செய்தபோது, அதற்குள் 26 காற்று புகாத பாக்கெட்டுகள் இருந்தது தெரியவந்தது. அந்த பாக்கெட்டுகளின் மீது ‘தாய்லாந்து நாட்டு உணவுப் பொருட்கள்’ என லேபிள் ஒட்டப்பட்டிருந்தது.

இதனால் சந்தேகம் அடைந்த அதிகாரிகள், பாக்கெட்டுகளை பிரித்து சோதனை செய்தனர்.

15 கிலோ உயர்ரக கஞ்சா பறிமுதல்

அப்போது பாக்கெட்டுகளுக்குள் பதப்படுத்தப்பட்ட உயர் ரக ‘ஹைட்ரோபோனிக்’ கஞ்சா மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து சுமார் 15 கிலோ எடையுள்ள போதைப்பொருளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதன் சர்வதேச சந்தை மதிப்பு சுமார் ரூ.5 கோடியே 26 லட்சம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

கடத்தல் கும்பல் குறித்து விசாரணை

போதைப்பொருளை பறிமுதல் செய்த அதிகாரிகள், அதை கடத்தி வந்த வாலிபரை கைது செய்தனர். அவரிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த போதைப்பொருளை சென்னையில் யாரிடம் ஒப்படைப்பதற்காக கொண்டு வரப்பட்டது? அவரை தாய்லாந்துக்கு அனுப்பி வைத்த பின்னணியில் இருப்பவர்கள் யார்? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் அதிகாரிகள் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர்.

விமான நிலையத்தில் பரபரப்பு

சென்னை சர்வதேச விமான நிலையத்தில் ரூ.5.26 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

SCROLL FOR NEXT