தூத்துக்குடி,
தூத்துக்குடிக்கு வெளியூரில் இருந்து கஞ்சா கடத்தி வருவதாக மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் தூத்துக்குடி-மதுரை பைபாஸ் ரோட்டில் சிப்காட் பகுதியில் போலீசார் ரகசியமாக கண்காணித்து வந்தனர். அப்போது மதுரையில் இருந்து தூத்துக்குடி நோக்கி வந்த ஒரு லாரியை மடக்கி சோதனை செய்தனர்.
அதில் சில மூட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தன. அதனை போலீசார் திறந்து சோதனை செய்தபோது அதில் கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக போலீசார் அந்த லாரியில் 349 மூட்டைகளில் இருந்த சுமார் 718 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இதன் சர்வதேச மதிப்பு ரூ.8 கோடி என்று கூறப்படுகிறது.
இதை தொடர்ந்து லாரி டிரைவர் தூத்துக்குடி அய்யப்பன்நகரை சேர்ந்த மணிகண்டன்(எ) குண்டுமணி (வயது 33), சிவகங்கை மாவட்டம் இளையான்குடியை சேர்ந்த குகன்குமார்(31), புதுக்கோட்டை அய்யனார் காலனியைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி(33), பழையகாயலை சேர்ந்த சிவபெருமாள்(30) ஆகிய 4 பேரையும் மடக்கி பிடித்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த 4 பேரையும் கைது செய்தனர்.
அதே நேரத்தில் லாரியில் இருந்து தப்பி ஓடிய அய்யாதுரை, லட்சுமணன், சங்கர்கணேஷ், செல்வம்(எ) முத்துசெல்வம் ஆகிய 4 பேரையும் போலீசார் தேடி வருகின்றனர். கைது செய்யப்பட்ட 4 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி பேரூரணி ஜெயிலில் அடைத்தனர். இந்த சம்பவம் தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.