விழுப்புரம்,
எல்நினோ காலநிலை மாற்றத்தினால் மளிகைப் பொருட்களின் விலை உயரத்தொடங்கி இருக் கிறது. ஏற்கனவே மளிகை பொருட்களில் பருப்பு வகைகளின் விலை உயர்ந்து உள்ளது. அதன் தொடர்ச்சியாக மளிகை பொருட்களில் வரும் பூண்டு விலையும் தற்போது கிடுகிடுவென உயர்ந்து இருக்கிறது.
மராட்டிய மாநிலத்தில் இருந்து தமிழ்நாட்டுக்கு பூண்டின் தேவை பூர்த்தி செய்யப்பட்டு வருகிறது. அதிலும் நாளொன்றுக்கு விழுப்புரம் மார்க்கெட் டுக்கு மட்டும் சுமார் 10 டன் முதல் 15 டன் வரை பூண்டு விற்பனைக்கு கொண்டு வரப்பட்டு வந்தது. ஆனால் கடந்த சில வாரமாக பூண்டு வரத்து குறைந்து விட்டதாகவும், தற்போது நாள் ஒன்றுக்கு 5 டன் பூண்டு வரத்து வருவதாகவும், இதன் காரணமாக விலை அதிரடியாக உயர்ந்து இருப்பதாகவும் வியாபாரிகள் கூறுகின்றனர்.
கடந்த மாதத்தில் ஒரு கிலோ பூண்டு ரூ.80 முதல் ரூ.100 வரை கிடைத் தது. நல்ல தரமான உயர்ரக பூண்டு ஒரு கிலோ ரூ.120 முதல் ரூ.140-க்கு கிடைத்து வந்தது. ஆனால் தற்போது அது தலைகீழாக மாறிவிட்டது. ஒரு கிலோ பூண்டு ரூ.300 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
அதாவது நாட்டுப்பூண்டு சிறிய ரகம் கிலோ ரூ.150 முதல் ரூ.160 வரை யும், நடுத்தரம் கிலோ ரூ.180 முதல் ரூ.220 வரையும், பெரிய அளவிலான நல்ல தரமான உயர்ரக பூண்டு கிலோ ரூ.280 முதல் ரூ.300 வரையும் விற்பனை செய்யப்படுகிறது. அதுபோல் ஒரு கிலோ மலைப்பூண்டு கடந்த மாதம் ரூ.150-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் தற்போது ரூ.350-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
விளைச்சல் பாதிப்பு ஒரு பக்கம் கூறப்பட்டாலும், மராட்டிய மாநிலத்தில் இருந்து உக்ரைன் நாட்டுக்கு பூண்டு ஏற்றுமதி செய்யப்படுவதும் வரத்து குறைவுக்கு ஒரு காரணம் என்றும், இனி வரும் நாட்களில் மேலும் பூண்டு விலை சற்று உயரக்கூடும் என்று உணவு தானிய மொத்த சந்தை வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். பூண்டு விலை உயர்வினால் இல்லத்தரசிகள் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.