வாணாபுரம்
வாணாபுரம், தச்சம்பட்டு, வெறையூர் உள்ளிட்ட பகுதிகளில் 30-க்கும் மேற்பட்ட காய்கறி கடைகள் உள்ளன. மேலும் இப்பகுதிகளில் மோட்டார் சைக்கிள் மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் பூண்டு, காய்கறிகள் உள்ளிட்டவைகள் விற்பனை செய்யப்படுகின்றன. வெளிமாவட்டம் மற்றும் வெளிமாநிலங்களில் விளையும் காய்கறிகள், பூண்டு ஆகியவை இப்பகுதியில் கொள்முதல் செய்து விற்பனை செய்யப்படுகிறது.
இந்த நிலையில் காய்கறி கடைகளில் கடந்த சில நாட்களாக பூண்டு வரத்து படிப்படியாக குறைந்ததால் பூண்டின் விலை நாளுக்கு நாள் அதிகரிக்க தொடங்கியது. கடந்த வாரம் பூண்டு கிலோ ரூ.160 முதல் ரூ.250 வரை விற்பனை செய்யப்பட்ட நிலையில் தற்போது ஒரு கிலோ ரூ.300 முதல் ரூ.350 வரை விற்பனையாகிறது.
அதே நேரத்தில் சில்லறை கடைகளில் ஒரு கிலோ பூண்டு ரூ.310 முதல் ரூ.360 வரை விற்பனை செய்யப்படுகிறது. இதனால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சமையலுக்கு அன்றாடம் பூண்டு தேவைப்படுவதால் விலை உயர்வை கண்டு இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர் மேலும் வேறு வழியின்றி கிலோ கணக்கில் இல்லாமல் ரூ.50 மற்றும் ரூ.100க்கு வாங்கி செல்கின்றனர்.
இதுதவிர மற்ற காய்கறிகளின் விலை அதிகரித்து வருகிறது. இதனால் ஏழை மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். வெளிமாநிலங்களில் தற்போது மழையின்றி விவசாய பயிர்கள் தண்ணீர் இல்லாமல் கடும் வறட்சியில் இருந்து வரும் நிலையில் வெளிமாநிலங்களில் இருந்து பூண்டு வரத்து குறைந்துள்ளதால் பூண்டின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வு சில வாரங்கள் நீடிக்கும் என்று வியாபாரிகள் கூறுகின்றனர்.