தஞ்சாவூர்,
தஞ்சாவூர் மாவட்டம், திருவோணம் அருகே உள்ள அம்மங்குடி ஊராட்சிக்கு உட்பட்ட லட்சுமிபுரம் கிராமத்தை சேர்ந்தவர் முருகையன் (வயது 66). கூலி தொழிலாளி.
இந்த நிலையில், கடந்த மாதம் (ஜூலை 30-ந் தேதி அதிகாலை இவரது வீடு திடீரென தீப்பிடித்து எறிந்தது. இதனால் முருகையன், அவரது குடும்பத்தினர்கள் மற்றும் பக்கத்து வீட்டை சேர்ந்தவர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது திடீரென வீட்டில் இருந்த சமையல் கியாஸ் சிலிண்டர் வெடித்து சிதறியது.
இந்த விபத்தில் முருகையனின் மனைவி செல்வி, மகள் அபிநயா, அதே கிராமத்தை சேர்ந்த காசிநாதன் (37), ராஜசேகர், பழனிவேல் (37), வேம்பையன் (47), வேம்பையனின் மனைவி கலையரசி, செல்வராஜ், காளியம்மாள், புவனேஷ் உள்பட 10 பேர் படுகாயம் அடைந்து தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர்.
இந்த நிலையில் நேற்று மாலை பழனிவேல் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த நிலையில் இன்று அதிகாலை தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த வேம்பையன். காசிநாதன் ஆகிய 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், சிலருக்கு தொடர்ந்து, சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.