தூத்துக்குடி,
தூத்துக்குடியில் திமுக முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-
தனி மனித ஒழுக்கம்தான் சமூக ஒழுக்கம் என எல்லாருக்கும் தெரியும்.அதை சொல்லிவிட்டு, பொறுப்பில் இருந்து கைநழுவ பார்க்கிறாரா முதல்-அமைச்சர் ? உங்கள் கட்சிகாரர்களுக்கே கிடைக்காத நீதி.ஒட்டுமொத்த தமிழக பெண்களுக்கு எப்படி நீதி வழங்கப் போகிறீர்கள்? பெரிய கண்டுபிடிப்பு.
சென்னையில் நடந்த சிறுமி வன்கொடுமை, ஸ்ரீவைகுண்டத்தில் நடந்த பிரச்சினை ஆகியவற்றில் தவெக கட்சியினர் ஈடுபட்டுள்ள நிலையில் நீங்கள் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதுதான் எங்களுடைய கேள்வி. உங்களுடைய கட்சியினரை அழைத்து நடவடிக்கை எடுங்கள்.
மு.க. ஸ்டாலின் முதல்-அமைச்சராக இருந்தபோது எல்லாவற்றிற்கும் ‘சிஎம் சார்’ தான் பொறுப்பு என்று கூறினீர்களே. இப்போது விஜய் முதல்-அமைச்சரான உடன் ‘தனிமனித ஒழுக்கம் தான் சமூக ஒழுக்கம்’ என்று சொல்கிறீர்கள். அப்போது இருந்த சிஎம் சார்க்கு மட்டும் சமூக ஒழுக்கம் என்று சொல்லத் தெரிகிறதா? அப்படி என்றால் நீங்கள் வசனம் பேசவில்லையா, புரிந்து பேசுகிறீர்களா என்று கேள்வி எழுப்புகிறேன்.
சிங்கப்பெண் அதிரடிப்படை தொடக்கவிழா என்பது ஒரு ஆடியோ லான்ச் போல இருந்தது. எப்படி எல்லா பிரசார பயணமும் ஒரு சினிமா ஒத்திகை பார்த்தது போல் இருந்ததோ, அதேபோல் இது ஆடியோ லான்ச் போன்று ஒரு நிகழ்ச்சியாக நடந்தது. அதற்கு பெரிய அளவில் ப்ரோமோஷன் செய்யப்பட்டது.
ஒரு குழந்தை பெறுவதற்கே 10 மாதம் ஆகும். ஆட்சி மாறியவுடன் எல்லாம் ‘நாங்கள் தான், நாங்கள் தான்’ என்று சமூக ஊடகங்களில் பொய் செய்தியை ப்ரோமோட் செய்கின்றார்கள். இனி மக்கள் எல்லோரும் வரும் செய்திகள் உண்மையா என்பதை ஆய்வு செய்து, அதன் உண்மைத் தன்மையை புரிந்துகொள்ள வேண்டும் என்பது எனது வேண்டுகோள்.உதாரணமாக, தூத்துக்குடியில் நான் அமைச்சராக இருந்தபோது 850 சிசிடிவி கேமராக்கள் வைக்கப்பட்டன. இவர்கள் ஆட்சிக்கு வந்தவுடன் மறுநாளே ‘எங்கள் முதல்-அமைச்சர் சிசிடிவி கேமராக்கள் வைத்து விட்டார்’ என்று ஒரு செய்தி சமூக வலைதளங்களில் பரவுகிறது.
அதேபோல், நமது பகுதியில் மாணவர்களுக்காக ஏசி பஸ் ஸ்டாப் எனது சட்டமன்ற நிதியில் வைத்தோம். ஆனால் அதை தற்போது ‘மாணவர்களுக்காக ஒரு ஏசி பஸ் ஸ்டாப் வைத்து விட்டோம்’ என்று சமூக வலைதளங்களில் பரப்புகின்றனர். திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட பிங்க் பேட்ரோல் என்ற திட்டத்தை பெயர் மாற்றம் செய்து ஸ்டிக்கர் ஒட்டி சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை என்று தொடங்கியுள்ளார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.