தமிழக செய்திகள்

பாலியல் வழக்கில் கைதான ஜெம் வீரமணி போக்சோ கோர்ட்டில் ஆஜர்

ஜெம் வீரமணி மீது புதிதாக மேலும் 2 பேர் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

சென்னை,

ஜெம் கிரானைட்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் வீரமணி, சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கு தமிழகத்தைத் தாண்டி தேசிய அளவிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்த வழக்கில் இதுவரை முக்கியக் குற்றவாளியான வீரமணி மற்றும் அவரது கூட்டாளிகள் உட்பட மொத்தம் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் தொடர்புடையவர்கள் எவ்வளவு செல்வாக்கு மிக்கவர்களாக இருந்தாலும் தப்ப முடியாது எனவும், குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் விஜய் உத்தரவிடுள்ளார்.

வீரமணி மீது இதுவரை 15-க்கும் மேற்பட்ட பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் அளித்துள்ள நிலையில், காவல்துறை தரப்பில் பல்வேறு சட்டப் பிரிவுகளின் கீழ் 4 வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்தன. முதல் அமைச்சரின் உத்தரவைத் தொடர்ந்து விசாரணை தீவிரமடைந்தது. இந்த வழக்கை விசாரிக்க 4 பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் தலைமையில் சிறப்புப் புலனாய்வுக் குழு (எஸ்.ஐ.டி.) அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

பாதிக்கப்பட்டவர்கள் தைரியமாகப் புகார் அளிப்பதற்காகச் சிறப்புப் புலனாய்வுக் குழு சார்பில் பிரத்யேக செல்போன் எண் (9345319676) வெளியிடப்பட்டது. இந்த எண்ணுக்குத் தொடர்ந்து புகார்கள் வருகின்றன. அதன் அடிப்படையில் காவல் துறை அதிகாரிகள் ரகசிய விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் ஜெம் வீரமணி மீது புதிதாக மேலும் 2 பேர் புகார் அளித்துள்ளனர். இந்த புகார்களின் அடிப்படையில் வீரமணி மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், விசாரணைக்காக அவரை சென்னையில் உள்ள போக்சோ கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். முந்தைய விசாரணையின்போது காணொலி காட்சி வாயிலாக ஜெம் வீரமணியை நீதிபதி விசாரித்த நிலையில், இன்று விசாரணைக்காக வீரமணியை போலீசார் நேரில் ஆஜர்படுத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT