தமிழக செய்திகள்

சபரிமலையில் நெய் மோசடி விவகாரம்: ஒட்டன்சத்திரம் வியாபாரிகள் 2 பேர் கைது

நெய் மோசடி மூலம் திருவிதாங்கூர் தேவஸ்தானத்திற்கு ரூ.2% கோடி இழப்பு ஏற்பட்டதாக கணக்கிடப்பட்டது.

திண்டுக்கல்,

சபரிமலையில் கடந்த சீசனில் அரவணை தயாரிக்க கேரள அரசின் பால்வள நிறுவனமான 'மில்மா' நிறுவனத்திடம் இருந்து 1.60 லட்சம் லிட்டர் நெய் கொள்முதல் செய்ய ஒப்பந்தம் செய்யப்பட்டது. அப்போது தரமற்ற நெய் வினியோகம் செய்யப்படுவதாக புகார் எழுந்தது. இதையடுத்து கேரள லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீஸ் குழு தலைமையில் விசாரணை நடைபெற்றது.

இதில் கொள்முதல் செய்யப்பட்ட மில்மா சுத்தமான நெய்யை சபரிமலைக்கு கொண்டு வரும் வழியில் காட்டு பகுதியில் வைத்து, தமிழ்நாட்டை சேர்ந்த மொத்த வியாபாரிகளுக்கு கைமாற்றி விட்டு, அவர்களிடம் இருந்து தரம் குறைந்த நெய்யை வாங்கி சபரிமலைக்கு வினியோகம் செய்தது கண்டு பிடிக்கப்பட்டது. இந்த முறைகேடு மூலம் திருவிதாங்கூர் தேவஸ்தானத்திற்கு ரூ.2% கோடி இழப்பு ஏற்பட்டதாக கணக்கிடப்பட்டது.

இதையடுத்து நெய் வினியோக வாகன ஒப்பந்ததாரர் கடந்த மாதம் கைது செய்யப்பட்டார். அவர் அளித்த வாக்குமூலத்தில் தமிழ்நாடு திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தை சேர்ந்த மொத்த நெய் வியாபாரிகளான வெங்கடேஸ்வரன், குமரன் ஆகியோர் மில்மா நிறுவனத்தின் தரமான நெய்யை எடுத்து விட்டு தங்களிடம் இருந்த தரம் குறைந்த நெய்யை சபரிமலைக்கு அனுப்பி வைத்தது தெரிய வந்தது.

இதையடுத்து வெங்கடேஸ்வரன், குமரன் ஆகிய இருவரையும் கேரள மாநில லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்பு சிறப்பு குழு அதிகாரிகள் கைது செய்தனர். இந்த வழக்கில் ஏற்கனவே திருவிதாங்கூர் தேவஸ்தான ஊழியர் ஒருவர் போலி பில்கள் தயாரித்து மோசடி செய்ததாக கைது செய்யப்பட்டிருந்தார். இதன்மூலம் இந்த வழக்கில் இதுவரை 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT