சென்னை,
மதுரை தனிஷ்க் நகைக்கடையில் கொள்ளையடிக்க ஸ்கூட்டரை காதலனிடம் கொடுத்து மீனாட்சி அனுப்பி வைத்தது தெரியவந்துள்ளது.
இதுகுறித்து போலீசார் கூறியதாவது:-
நிஷாந்தின் காதலி மீனாட்சி தற்போது புதிய வீடு கட்டி வருகிறார். இதற்காக தனக்கு பணம் தேவைப்படுவதாக கூறி உள்ளார். மேலும், கடன் இருப்பதாகவும் காதலனிடம் கூறி கண்ணீர் விட்டு அழுதுள்ளார். இதனால் கலங்கிய நிஷாந்த், நகைக்கடையில் கொள்ளையடிப்பதற்கான திட்டம் குறித்து காதலியிடம் தெரிவித்துள்ளார்.
திட்டப்படி நகைக்கடையில் கொள்ளையடிப்பதற்காக கடந்த 5-ந் தேதியன்று தனிஷ்க் நகைக்கடையில் மேலே அமைக்கப்பட்ட இரும்பு சாரத்தின் மூலமாக சென்று அங்கு லிப்டின் அருகே அமைக்கப்பட்டு இருக்கக்கூடிய அவசரகால வழியில் இருந்த இரும்பு வேலியை அகற்றிவிட்டு அதற்குள் உள்ளே புகுந்து சென்று பார்த்துள்ளார். சில உபகரணங்களுடன் 12-ந்தேதி நள்ளிரவில் இரும்பு சாரம் வழியாக மீண்டும் கடைக்குள் சென்று கொள்ளையடித்துள்ளார்.
கொள்ளையடிக்க செல்ல தனது காதலியான மீனாட்சி கொடுத்த ஸ்கூட்டரை பயன்படுத்தி இருக்கிறார். கொள்ளையடித்த பையுடன் நேரு நகர், மாடக்குளம், பழங்காநத்தம் திருப்பரங்குன்றம் ஆகிய பகுதிகளில் சுற்றி சுற்றி வந்துள்ளார். இதையடுத்து அதிகாலை தனது தந்தை சுரேஷிடம் தொடர்பு கொண்டு தன்னிடம் ஒரு பை இருப்பதாக கூறி வீட்டில் வைக்குமாறு கூறியுள்ளார். அதனை சுரேஷ் வாங்கி வீட்டில் வைத்த பின்னர் வீட்டிற்கு சென்ற நிஷாந்த் மீண்டும் பையை எடுத்து பல்வேறு பகுதிகளுக்கு கொண்டு சென்றார்.
கடைக்குள் இருந்த சி.சி.டி.வி கேமாராக்களை ஆய்வு செய்தபோது நிஷாந்த் கையில் இருந்த டாட்டு மூலம் ஒரு துப்பு கிடைத்தது. இருந்தாலும் போலீசாரை குழப்புவதற்காக பல்வேறு வேலைகளை செய்துள்ளார்.நிஷாந்த் சிறிய சிறிய திருட்டுகளில் ஈடுபட்டு வந்ததும் தற்போது காதலிக்காக மிகப்பெரிய அளவிலான கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டதும் தெரிய வந்துள்ளது. இதுபோல், அவரது தந்தை மீது சில வழக்குகள் இருப்பதாக தெரிகிறது.
மீனாட்சி ஒரு யூடியூப் சேனலின் பணி செய்தபோது. சம்பள பிரச்சினை காரணமாக வெளியேறி உள்ளார். புதிதாக வீடு கட்டுவது தொடர்பான வீடியோவை பதிவு செய்து அதில் வீடு முழுமையாக கட்டுவதற்கு போதிய பணம் இல்லை என்ற புலம்பிய வீடியோவை பதிவிட்டுள்ளார்.
இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.