சென்னை,
பல்கலைக்கழகங்களின் வேந்தர்களாக முதல்-அமைச்சரே இருக்க வேண்டும் என்ற முந்தைய அரசின் நிலைப்பாட்டை பின்பற்ற வேண்டியது இல்லை என்றும் முதல்-அமைச்சர் விஜய் இது குறித்து முடிவு எடுப்பார் என்றும் மதுரையில் உயர் கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் செய்தியாளர்களிடம் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் காங்கிரஸ் அமைச்சர் விஸ்வநாதனுக்கு வி.சி.க. எம்.பி. ரவிக்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக வி.சி.க. எம்.பி. ரவிக்குமார் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-
“பல்கலைக்கழகங்களின் வேந்தராக முதலமைச்சரே இருக்கவேண்டும் என்ற முந்தைய அரசின் நிலைபாட்டைப் பின்பற்றவேண்டியதில்லை” என உயர்கல்வித்துறை அமைச்சர் கூறியிருப்பது மாநில உரிமைகளுக்காகத் தமிழ்நாடு போராடிப் பெற்றதைக் கைவிடுவது மட்டுமல்ல, சுப்ரீம்கோர்ட்டின் தீர்ப்பையும் அவமதிப்பதாகும். உயர்கல்வித்துறை அமைச்சர் இதை முதல்-அமைச்சர் விஜய் அவர்களின் ஒப்புதலோடுதான் சொல்கிறாரா?
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல்-அமைச்சரே பல்கலைக்கழக வேந்தராக இருக்க வேண்டும் என்பது கடந்த தி.மு.க. அரசின் நிலைப்பாடாக இருந்தது. ஆனால், பல்கலைக்கழக வேந்தராக கவர்னர் இருந்ததால் அப்போதைய தி.மு.க. அரசுக்கும், கவர்னருக்கும் இடையே அவ்வப்போது வார்த்தை மோதல் ஏற்பட்டது. இந்த சூழலில், பல்கலைக்கழக வேந்தர் நியமனம் தொடர்பாக கடந்த அரசின் நிலைப்பாட்டை பின்பற்ற வேண்டியதில்லை என காங்கிரஸ் உயர்கல்வித்துறை அமைச்சர் தெரிவித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.