தமிழக செய்திகள்

ஈரோடு பனை வெல்லத்திற்கு உலகளாவிய அங்கீகாரம்... பிரதமர் மோடிக்கு நயினார் நாகேந்திரன் நன்றி!

தமிழக இளைஞர்களும் போதையைத் தவிர்த்து முன்னேற வேண்டும் என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

சென்னை,

140-வது ‘மன் கி பாத்’ நிகழ்ச்சியில், தமிழகத்தின் ஈரோடு பனை வெல்லத்திற்கு உலகளாவிய அங்கீகாரம் அளித்த பாரதப் பிரதமர் நரேந்திர மோடிக்கு மனமார்ந்த நன்றி என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:-

ஈரோடு பனை வெல்லம்

பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் இன்றைய 140-வது ‘மன் கி பாத்’ உரை, தமிழகத்தின் பெருமையை உலகறியச் செய்துள்ளது. ஈரோடு இயற்கை பனை வெல்லம் முதன்முறையாக ஐரோப்பாவிற்கு ஏற்றுமதியானதைப் பிரதமர் பாராட்டியது நமது விவசாயிகளுக்குக் கிடைத்த மாபெரும் கௌரவமாகும். மேலும், காஞ்சி காமகோடி பீடத்தின் பூஜ்ய சங்கராச்சாரியார் வட்நகரை ‘குஜராத்தின் காசி’ எனப் போற்றியதைக் குறிப்பிட்டது, நமது அழியாத பண்பாட்டுப் பிணைப்பைப் பறைசாற்றுகிறது.

டிஜிட்டல் பாதுகாப்பு

போதையிலிருந்து மீண்ட இளைஞருடன் பிரதமர் மோடி உரையாடியது, போதைப்பொருள் இல்லாத சமுதாயத்தை உருவாக்கப் பெரும் உத்வேகம் அளிக்கிறது; தமிழக இளைஞர்களும் போதையைத் தவிர்த்து முன்னேற வேண்டும். மேலும், தமிழ் உள்ளிட்ட 23 மொழிகளில் செயல்படும் மத்திய அரசின் ‘சஞ்சார் சாத்தி’ (Sanchar Saathi) தளம் மூலம் இதுவரை 14 லட்சம் போன்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், ரூ. 5,000 கோடி மோசடி தடுக்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் குறிப்பிட்டுப் பேசியிருக்கிறார். எனவே, தமிழக மக்களும் இத்தகைய செயலிகளைப் பயன்படுத்தித் தங்கள் டிஜிட்டல் பாதுகாப்பை உறுதி செய்து பயன்பெற வேண்டும்.

வளர்ச்சியடைந்த பாரதத்தை உருவாக்கும் பிரதமர் மோடியின் உன்னத முயற்சிகளுக்கு, தமிழக மக்கள் அனைவரும் தொடர்ந்து பேராதரவு அளிக்க வேண்டும் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT