நெல்லை,
வருகிற 8-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. தீபாவளி பண்டிகைக்கு இன்னும் சில நாட்களே உள்ளதால், நேற்று நெல்லை மேலப்பாளையம் சந்தையில் ஆடுகள் விற்பனை அமோகமாக நடைபெற்றது.
மேலும் தற்போது நெல்லை, தென்காசி மாவட்டங்களில் முப்புடாதி அம்மன் கோவில் கொடை விழா அதிகளவில் நடக்கிறது. இந்த விழாக்களில் ஆடு வெட்டுதல் நிகழ்ச்சி நடைபெறும். இதையொட்டி சந்தையில் ஆடுகளை அதிகளவில் வாங்கி சென்றனர். மேலப்பாளையம் சந்தைக்கு நெல்லை மாவட்டம் மட்டுமின்றி தென்காசி, தூத்துக்குடி, மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஆடுகளை விற்பனைக்காக கொண்டு வந்தனர். ஆடுகளின் ரகம், தரத்துக்கு ஏற்ப ரூ.12 ஆயிரத்தில் இருந்து ரூ.27 ஆயிரம் வரையிலும் விற்பனை செய்யப்பட்டது.
மேலப்பாளையம் சந்தையில் நேற்று ஆடுகள் மட்டும் ரூ.1 கோடியே 52 லட்சத்துக்கும் அதிகமாக விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனர். இதேபோன்று கோழிகள் ரூ.25 லட்சத்துக்கும் அதிகமாக விற்பனையானது.