கடலூர்,
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வடலூர் வாரச்சந்தையில் ஒரே நாளில் சுமார் ரூ.4 கோடிக்கு ஆடுகள் விற்பனையாகின. வியாபாரிகள் போட்டிபோட்டு ஆடுகளை வாங்கிச் சென்றனர்.
கடலூர் மாவட்டம் வடலூரில் வாரந்தோறும் சனிக்கிழமை நடைபெறும். இந்த சந்தைக்கு தீபாவளியை முன்னிட்டு நேற்று அதிகாலை 2 மணி முதலே பல்வேறு பகுதிகளில் இருந்து ஆடுகள் விற்பனைக்காக கொண்டுவரப்பட்டன.
வடலூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான நெய்வேலி, பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி, சேத்தியாத்தோப்பு, புவனகிரி, கம்மாபுரம் உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் தாங்கள் வளர்த்து வந்த வெள்ளாடுகள், கொடி ஆடுகள், செம்மறி ஆடுகளை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர்.
ஆடுகளை வாங்குவதற்காக கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சென்னை, திருவண்ணாமலை, சேலம், திருச்சி, மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், புதுச்சேரியில் இருந்தும் ஏராளமான வியாபாரிகள் வந்திருந்தனர்.
ஆடுகளின் எடை, ரகம் மற்றும் தரத்தைப் பொறுத்து விலை நிர்ணயம் செய்யப்பட்டது. ஒரு ஆடு குறைந்தபட்சம் ரூ.6 ஆயிரம் முதல் அதிகபட்சம் ரூ.35 ஆயிரம் வரை விற்பனையானது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆடுகளுக்கு நல்ல வரவேற்பு இருந்ததால் வியாபாரிகள் போட்டிபோட்டு வாங்கிச் சென்றனர்.
நேற்று ஒரே நாளில் சுமார் 1,500 ஆடுகள் விற்பனையானதாகவும், இதன் மூலம் ரூ.4 கோடி வரை வியாபாரம் நடைபெற்றதாகவும் சந்தை ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.