தமிழக செய்திகள்

வேப்பூர் ஆட்டுச் சந்தையில் ரூ.7 கோடிக்கு ஆடுகள் விற்பனை

ஒரு ஆடு குறைந்தபட்சம் ரூ.4 ஆயிரம் முதல் அதிகபட்சம் ரூ.30 ஆயிரம் வரை விற்பனையானது.

விருத்தாசலம், நவ.5-

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள வேப்பூர் ஆட்டுச் சந்தையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆடுகள் விற்பனை அமோகமாக நடைபெற்றது. இதில் சுமார் ரூ.7 கோடிக்கு ஆடுகள் விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

வேப்பூரில் நடைபெறும் வாரச்சந்தையில் வாரந்தோறும் ஆடுகள் விற்பனை நடைபெற்று வருகிறது. குறிப்பாக பக்ரீத், தீபாவளி உள்ளிட்ட முக்கிய பண்டிகை காலங்களில் ஆடுகள் விற்பனை களைகட்டுவது வழக்கம். இந்த சந்தையில் வெள்ளாடு, குறும்பாடு, கொடியாடு, மாலாடு மற்றும் செம்மறி ஆடுகள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன.

ஆடுகள் விற்பனை

இந்த நிலையில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இன்று நடைபெற்ற சந்தைக்கு அதிகாலை 2 மணி முதலே ஆடுகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டன. சேலம், நாமக்கல், திருச்சி, திருப்பூர், வேலூர், திருவண்ணாமலை, தேனி, மதுரை, தூத்துக்குடி, திருநெல்வேலி, ராமேஸ்வரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்களில் வியாபாரிகள் ஆடுகளை கொண்டு வந்தனர்.

இதனை வாங்குவதற்காக உள்ளூர் மற்றும் வெளியூர்களை சேர்ந்த வியாபாரிகள், பொதுமக்கள் என ஏராளமானோர் அதிகாலையிலேயே சந்தையில் குவிந்தனர். இதனால் வேப்பூர் வாரச்சந்தையில் வழக்கத்தைவிட ஆடுகள் விற்பனை அதிகமாக நடைபெற்றது.

அதிகபட்சம் ரூ.30 ஆயிரம் வரை விற்பனை

ஆடுகளின் ரகம், எடை மற்றும் தரத்திற்கு ஏற்ப விலை நிர்ணயம் செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டது. ஒரு ஆடு குறைந்தபட்சம் ரூ.4 ஆயிரம் முதல் அதிகபட்சம் ரூ.30 ஆயிரம் வரை விற்பனையானது.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் அதிகளவில் ஆடுகளை வாங்கிச் சென்றதால் சந்தையில் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்றது. இதன் மூலம் வேப்பூர் ஆட்டுச் சந்தையில் சுமார் ரூ.7 கோடிக்கு ஆடுகள் விற்பனையானது.

SCROLL FOR NEXT