தமிழக செய்திகள்

சென்னையில் ரூ.245 கோடி தங்க-வைர நகைகள் பறிமுதல்

சவுகார்பேட்டையில் இருந்து பல்லாவரத்தில் உள்ள ஒரு நிறுவனத்திற்கு நகைகளை கொண்டு சென்றது கண்டறியப்பட்டது.

சென்னை,

சட்டசபை தேர்தலையொட்டி சட்டவிரோதமாக எடுத்துச்செல்லப்படும் ரொக்க பணம் மற்றும் தங்க-வைர நகைகள் உள்ளிட்ட பொருட்களை தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள், போலீசார் உதவியோடு பறிமுதல் செய்து வருகிறார்கள்.

நேற்று முன்தினம் இரவு சென்னை அடையாறு பகுதியில் தேர்தல் பறக்கும்படைஅதிகாரிகள் வாகனங்களை மடக்கி சோதனை போட்டனர். அப்போது, ஒரு வாகனத்தில் சோதனை போட்டபோது, அதில் பெரியஅளவில்தங்க-வைர நகைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த நகைகள் பெட்டிகளில் வைக்கப்பட்டிருந்தது. அவற்றை சரிபார்த்தபோது அதன் மதிப்பு ரூ.245 கோடி என்று தெரியவந்தது.

சென்னை சவுகார்பேட்டையில் இருந்து பல்லாவரத்தில் உள்ள ஒரு நிறுவனத்திற்கு நகைகளை கொண்டு சென்றது கண்டறியப்பட்டது. ஆனால் அந்த நகைகளுக்கு உரிய ஆவணங்கள் இருந்தன. இதுபோல் பெரிய அளவில் நகை உள்ளிட்டவைகளை எடுத்து செல்லும்போது தேர்தல் ஆணையத்தின் முன்அனுமதியை பெறுவது அவசியமான ஒன்றாகும். தேர்தல் ஆணையத்தின் அனுமதி பெறாமல், தங்க-வைர நகைகளை எடுத்துச்சென்றது தெரியவந்தது.

இதனால் ரூ.245 கோடி மதிப்புள்ள குறிப்பிட்ட நகைகளை பறக்கும்படை தேர்தல் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பின்னர் அந்த நகைகள் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமானவரித் துறையிடம் ஒப்படைக்கப்பட்டது. வருமான வரித்துறையினர் இதுகுறித்து விசாரணை நடத்தி, உரிய நடவடிக்கை எடுப்பார்கள் என்று தேர்தல் பறக்கும் படையினர் தெரிவித்தனர்.