சென்னை,
சென்னை சென்டீரல் ரெயில் நிலையத்தில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி பெண் பயணியிடம் 3 சவரன் தங்க சங்கிலியை பறித்த 2 பெண்கள் கைது செய்யப்பட்டனர்.
ஈரோடு மாவட்டத்தை சேர்ந்தவர் பாப்பாத்தி ராமசாமி. இவர் சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்திற்கு வந்து, ஊருக்கு செல்வதற்காக பொது பெட்டியில் ஏறியுள்ளார். ரெயில் புறப்பட தயாரான நேரத்தில், பெட்டியில் கடுமையான கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது.
இந்த நெரிசலை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்ட பர்தா அணிந்த இரு பெண்கள், பாப்பாத்தியின் கழுத்தில் இருந்த 3 சவரன் தங்க சங்கிலியை கண் இமைக்கும் நேரத்தில் பறித்து கொண்டு தப்பினர்.
இது குறித்து சென்டடிரல் ரெயில்வே போலீஸில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து,ரெயில் நிலைய வளாகத்தில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில், பர்தா அணிந்தபடி கூட்ட நெரிசலை பயன்படுத்தி இரண்டு பெண்கள், மூதாட்டியிடம் செயின் திருடியது தெரியவந்தது.
இதையடுத்து கர்நாடகாவை சேர்ந்த பாரதி (70), பூஜா (28) ஆகிய இருவரை் சென்டடிரல் ரெயில்வே போலீஸார் கைது செய்தனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.