கூடலூர்,
நீலகிரி மாவட்டம் கூடலூர் தேவாலா பகுதியில் ஆங்கிலேயர் கால தங்கச் சுரங்கம் உள்ளது. தற்போது வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த இடத்திற்கு பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், அதையும் மீறி மர்ம ஆசாமிகள் புகுந்து தங்கத் துகள்கள் கலந்த மண்ணை தோண்டி எடுத்து கடத்தி செல்கின்றனர். குறிப்பாக, கேரள ஆசாமிகள் தினமும் வந்து இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபடுகின்றனர்.
வனத்துறையினர் அடிக்கடி ரோந்து பணியில் ஈடுபட்டாலும், மர்ம ஆசாமிகள் தங்க சுரங்க குழிக்குள் பதுங்கி தப்பிவிடுகின்றனர். இதனால், டிரோன் மூலமும் கண்காணித்து வந்தனர். தற்போது, இந்தப் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளதால், தங்கத் துகள்கள் கலந்த மண் கடத்தி செல்லப்படும் சம்பவங்கள் அதிகரித்துள்ளது. இதுகுறித்து, தேவாலா, நாடுகாணி சுற்றுவட்டார பகுதி மக்கள் வருவாய்த் துறையிடம் புகார் அளித்துள்ளனர்.
இதுகுறித்து பொதுமக்கள் சிலர் கூறும்போது, "தமிழக வனப்பகுதிக்குள் கேரள ஆசாமிகள் அத்துமீறி நுழைந்து தங்க துகள்களை சேகரித்து செல்கின்றனர். இதை வனத்துறையினரும், போலீசாரும் கண்டுகொள்வதில்லை. இனியாவது கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும்" என்று கோரிக்கை விடுத்தனர்.
இந்த நிலையில், கூடலூர் ஆர்.டி.ஓ. குணசேகரன், தாசில்தார் முத்துமாரி, வருவாய் ஆய்வாளர் ராம்குமார் உள்பட வருவாய்த் துறையினர் தேவாலா தங்க சுரங்க வனப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர். கேரளா ஆசாமிகளால் தோண்டப்பட்டுள்ள ஆபத்தான குழிகளையும் பார்வையிட்டனர். கூடலூர் வனப்பகுதியில் தங்க வேட்டை நடைபெறும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.