சென்னை,
சென்னை அரசு மருத்துவமனைகளில் பிறந்த குழந்தைகளுக்கு தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக வெளியாகியுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தினை இன்று (28.09.2026) மதுரையில் தொடங்கி வைத்தார்கள்.
இதனைத் தொடர்ந்து, சென்னை மாவட்டத்தில் கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர் , பள்ளிக்கல்வி, தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் ராஜ்மோகன், செயற்கை நுண்ணறிவு, தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் டாக்டர் ரா. குமார் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தின் கீழ் அரசு மருத்துவமனைகள் மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சியின் மருத்துவமனைகளில் 22.06.2026 முதல் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரங்களை வழங்கித் தொடங்கி வைத்தனர்.
மேலும், திருவல்லிக்கேணி, கஸ்தூரிபா காந்தி மருத்துவமனையில் உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் வெங்கடரமணன், எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனையில் பள்ளிக்கல்வி, தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் ராஜ்மோகன், ராயபுரம் மண்டலம், ஆர்.எஸ்.ஆர்.எம் மகப்பேறு மருத்துவமனையில் நிதி, திட்டம் மற்றும் வளர்ச்சித்துறை அமைச்சர் மரியவில்சன் , தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தின் கீழ் அரசு மருத்துவமனைகள் மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சியின் மருத்துவமனைகளில் 22.06.2026 முதல் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரங்களை வழங்கித் தொடங்கி வைத்தனர்.
சென்னை மாவட்டத்தில் கடந்த 22.06.2026 முதல் 26.09.2026 வரை அரசு மருத்துவமனைகள் மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சியின் 16 நகர்ப்புற சமுதாய சுகாதார மையங்கள் மற்றும் 3 மகப்பேறு மருத்துவமனைகளில் பிறந்த 6,548 குழந்தைகளுக்கும் இத்திட்டத்தின் மூலம் ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கப்படுகிறது. இந்த மோதிரம் வழங்கும் பணி தினமும் 200 முதல் 300 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கப்பட்டு அக்டோபர் மாத இறுதிக்குள் முடிவடையும். இது தொடர்பாக மேற்கண்ட கால கட்டத்தில் பிறந்த குழந்தைகளின் தாய்மார்களுக்கு தங்க மோதிரம் பெற்றுக் கொள்ள அழைப்பிதழ்கள் வழங்கப்படும். அழைப்பிதழில் குறிப்பிட்டுள்ள நாளில் குறிப்பிட்டுள்ள மருத்துவமனையில் வைத்து தங்க மோதிரம் வழங்கப்படும்.
பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட திருவல்லிக்கேணி-கஸ்தூரிபா காந்தி மருத்துவமனை, கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, ஆர்.எஸ்.ஆர்.எம் மகப்பேறு மருத்துவமனை, எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனை, திரு.வி.க. நகரில் உள்ள புறநகர் மருத்துவமனை, ஈஷா திருவொற்றியூர் அரசு மருத்துவமனை, அயனாவரம் இ.எஸ்.ஐ. மருத்துவமனை, மாதவரம் துணை மாவட்ட அரசு மருத்துவமனை, மாநகராட்சியின் 16 நகர்ப்புற சமுதாய சுகாதார மையங்கள் மற்றும் 3 மகப்பேறு மருத்துவமனைகளில் 22.06.2026 முதல் 26.09.2026 வரை பிறந்த 6,548 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கப்படுகிறது.
மேலும், 27.09.2026 முதல் பிறந்த மற்றும் பிறக்கும் குழந்தைகளுக்கு அவர்கள் மருத்துவமனையில் குழந்தை பிறந்து, பின்னர் வீட்டிற்குச் செல்லும் போதே தங்க மோதிரம் வழங்கப்படும். இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு சுகாதாரத் துறையின் மருத்துவ சேவைகள் மற்றும் வசதிகள் மீதான நம்பிக்கையை வளர்ப்பதும், அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் நிகழும் குழந்தைப் பிறப்பைக் கொண்டாடுவதும், அரசு சுகாதார நிலையங்களில் பிறக்கும் குழந்தைகளின் குடும்பங்களுக்கு அரசின் அக்கறை மற்றும் நலத்திட்ட ஆதரவை வெளிப்படுத்தும் வகையிலான ஒரு பயனுள்ள அடையாளத்தை வழங்குவதும் இதன் முக்கிய நோக்கங்களாகும். பெருநகர சென்னை மாநகராட்சியில் இத்திட்டத்தில் மையங்கள் (Hubs) – 4, பிரசவ மையங்கள் கிளைகள் (Spokes) – 19 இயங்குகின்றன.
இந்த நிகழ்வின் போது, PICME பதிவு, வசிப்பிடச் சரிபார்ப்பு, செயல்முறை ஆணை உருவாக்குதல், மையங்களிலிருந்து கிளைகளுக்கு மோதிரத்தை வழங்குதல், தாய்மை APPல் புகைப்படம் எடுத்தல் மற்றும் தாய்க்கு மோதிரத்தை வழங்குதல் (பெற்றுக் கொண்டதற்கான ஒப்புதலுடன்) மற்றும் இணையதளம் மற்றும் பதிவேட்டில் தினசரி இருப்பு விவரங்களைப் பராமரித்தல் ஆகிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது. பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் தொடர்பான சந்தேகம் மற்றும் விளக்கங்களுக்கு 94451 94916 என்ற எண்ணில் பயனாளிகள் உள்ளிட்ட பொதுமக்கள் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.