தமிழக செய்திகள்

தடகள போட்டியில் பதக்கம் வென்ற கோமதி, ஆரோக்கிய ராஜீவுக்கு ஊக்கத்தொகை; தி.மு.க. அறிவிப்பு

தடகள போட்டியில் பதக்கம் வென்ற கோமதி, ஆரோக்கிய ராஜீவுக்கு தி.மு.க. ஊக்கத்தொகை அறிவித்துள்ளது. #GomathiMarimuthu

சென்னை,

கத்தார் நாட்டின் தோகாவில் 23வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி நடந்தது. இதில் 2வது நாளில் நடந்த பெண்களுக்கான 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இந்திய வீராங்கனை கோமதி மாரிமுத்து (வயது 30) 2 நிமிடம் 02.70 வினாடியில் பந்தய தூரத்தை கடந்து தங்கப்பதக்கம் வென்றார்.

இது அவரது சிறந்த ஓட்ட நேரமாகும். தங்கப்பதக்கம் வென்ற கோமதி தமிழ்நாட்டை சேர்ந்தவர் ஆவார். இந்த போட்டி தொடரில் இந்தியா வென்ற முதல் தங்கம் இதுவாகும். அவரது தந்தை புற்றுநோயால் உயிர் இழக்க, பயிற்சியாளரும் காலமானார். உடல் ரீதியால் பாதிக்கப்பட்ட கோமதி, தனது 30 வது வயதில் பல சவால்களை சந்தித்து சாதனை படைத்துள்ளார்.

போட்டியின் 3வது நாளில் நடந்த 4 x 400 மீட்டர் கலப்பு தொடர் ஓட்டத்தில் முகமது அனாஸ், பூவம்மா, விஸ்மயா, ஆரோக்ய ராஜீவ் ஆகியோர் அடங்கிய இந்திய அணி 3 நிமிடம் 16.47 வினாடிகளில் இலக்கை எட்டி வெள்ளிப்பதக்கத்தை பெற்றது. இவர்களில் ஆரோக்ய ராஜீவ் தமிழக வீரர் ஆவார்.

இதேபோன்று கடைசி நாளில், ஆண்கள் மற்றும் பெண்களுக்கான 4 x 400 மீட்டர் தொடர் ஓட்டம் இரண்டிலும் இந்தியாவுக்கு வெள்ளிப்பதக்கம் கிடைத்தது. இதில் ஆண்கள் அணியில் இடம் பெற்ற 4 பேரில் ஆரோக்ய ராஜீவும் ஒருவர். ராணுவத்தில் பணியாற்றும் ஆரோக்ய ராஜீவ் திருச்சியை சேர்ந்தவர்.

தமிழக காங்கிரஸ் அறக்கட்டளை சார்பில் தங்கை மங்கை கோமதி மாரிமுத்துவுக்கு ரூ.5 லட்சம் வழங்கப்படும் என தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி அறிவித்துள்ளார்.

இந்நிலையில், தடகள போட்டியில் தங்க பதக்கம் வென்ற கோமதி மாரிமுத்துவிற்கு ரூ.10 லட்சம் மற்றும் வெள்ளி பதக்கம் வென்ற ஆரோக்கிய ராஜீவுக்கு ரூ.5 லட்சம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT