4 பேர் கைது 
தமிழக செய்திகள்

பிளிங்கிட் கிடங்கில் ரூ.10 லட்சம் மதிப்பிலான பொருட்கள் திருட்டு: மேலாளர் உட்பட 4 பேர் கைது

அவர்களிடமிருந்து 7 சிசிடிவி ஹார்ட் டிஸ்க்குகள் உட்பட ரூ.3.50 லட்சம் மதிப்பிலான திருட்டுப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

சென்னை,

சென்னை ராயப்பேட்டையில் உள்ள பிளிங்கிட் (Blinkit) நிறுவனத்தின் கிடங்கில் ரூ.10 லட்சம் மதிப்பிலான எலக்ட்ரானிக் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், ஸ்டோர் மேலாளர் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

வெளிச்சத்திற்கு வந்த திருட்டு

சென்னை ராயப்பேட்டையில் பிளிங்கிட் நிறுவனத்தின் சரக்கு கிடங்கு செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த 16-ம் தேதி, கிடங்கில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்கள் திடீரென செயல்படாமல் இருப்பதை அங்கு பணியாற்றும் ஊழியர் ஒருவர் கவனித்துள்ளார். இது குறித்து அவர் ஸ்டோர் மேலாளர் கீர்த்திவாசனிடம் (வயது 31) தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து, தொழில்நுட்ப வல்லுநர்களைக் கொண்டு ஆய்வு செய்தபோது, கிடங்கில் இருந்த 7 சிசிடிவி ஹார்ட் டிஸ்க்குகள் மாயமாகியிருந்தது தெரியவந்தது.

ரூ.10 லட்சம் மதிப்பிலான பொருட்கள் மாயம்

இதனைத் தொடர்ந்து கிடங்கில் இருந்த பொருட்களைச் சரிபார்த்தபோது, ரூ.1.40 லட்சம் மதிப்பிலான 7 சிசிடிவி ஹார்ட் டிஸ்க்குகள், விலையுயர்ந்த புளூடூத் ஹெட்செட்கள், இயர்பட்ஸ், ஸ்மார்ட் வாட்சுகள் மற்றும் அழகுசாதனப் பொருட்கள் என மொத்தம் ரூ.10 லட்சம் மதிப்பிலான பொருட்கள் திருடுபோயிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து கீர்த்திவாசன் ராயப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

கூட்டுச் சதியில் ஈடுபட்ட ஊழியர்கள்

புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த ராயப்பேட்டை போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இதில், கிடங்கில் பணியாற்றி வரும் மற்றொரு மேலாளரான ஸ்ரீகாந்த் (வயது 22), உதவி மேலாளர் சிவகுமார் (வயது 26) ஆகியோர், முன்னாள் ஊழியர்களான ஸ்ரீதரன் (வயது 26) மற்றும் ராகேஷ் (வயது 23) ஆகியோருடன் இணைந்து இந்த திருட்டில் ஈடுபட்டது அம்பலமானது. சாட்சியங்களை அழிப்பதற்காகவே அவர்கள் சிசிடிவி ஹார்ட் டிஸ்க்குகளையும் திருடிச் சென்றது விசாரணையில் தெரியவந்துள்ளது.

4 பேர் கைது- பறிமுதல்

இதையடுத்து நேற்று (புதன்கிழமை) ஸ்ரீகாந்த், சிவகுமார், ஸ்ரீதரன் மற்றும் ராகேஷ் ஆகிய 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 7 சிசிடிவி ஹார்ட் டிஸ்க்குகள் உட்பட ரூ.3.50 லட்சம் மதிப்பிலான திருட்டுப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கைது செய்யப்பட்ட 4 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், இந்த வழக்கில் தொடர்புடைய தலைமறைவாக உள்ள மற்ற நபர்களைப் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

SCROLL FOR NEXT