நாகர்கோவில்,
கூகுள் மேப்பை பார்த்து சென்று குறுகிய தெருவில் சிக்கிக்கொண்ட காரை பொதுமக்கள் பத்திரமாக மீட்டனர்.
கேரளம் மாநிலம் அடூரில் இருந்து கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரத்திற்கு 4 வாலிபர்கள் நேற்று முன்தினம் காரில் புறப்பட்டனர். அவர்கள் கூகுள் வழிகாட்டி உதவியுடன் வந்து கொண்டிருந்தனர். காரில் இருந்த 4 வாலிபர்களும் மதுபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் அவர்கள் மேல்புறம் அருகே உள்ள செம்மங்காலி பகுதியில் வந்தபோது, பைக் செல்லக்கூடிய அளவிலான ஒரு குறுகிய தெருவுக்குள் காரை இயக்கி உள்ளனர். அப்போது சிறிது தூரம் சென்றதும் கார் தெருவின் இருபுறமும் இருந்த வீடுகளின் காம்பவுண்ட் சுவரில் உரசியுள்ளது. தொடர்ந்து இயக்க முடியாத வகையில் கார் வசமாக சிக்கிக்கொண்டது. மேலும், காரில் இருந்த வாலிபர்களும் கதவை திறந்து வெளியே வரமுடியாமல் தவித்தனர்.
இதற்கிடையே சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் வீடுகளில் இருந்து வெளியே வந்து பார்த்தனர். அப்போது அந்த கார் முன்னும்-பின்னும் இயக்க முடியாத வகையில் சிக்கி இருப்பதை கண்டனர். பின்னர் வாலிபர்களின் நிலையை புரிந்து கொண்ட பொதுமக்கள், காரை தள்ளி ஒருவழியாக வெளியே கொண்டு வந்தனர். குறுகிய தெருவுக்குள் சென்றதால் காரின் இருபுறமும் சுவர்களில் உரசி சேதமாகியது.
இதற்கிடையே தகவல் அறிந்து குழித்துறை தீயணைப்பு துறையினரும் மீட்பு பணிக்காக அங்கு வந்தனர். தீயணைப்பு துறையினர் வாலிபர்களிடம் விசாரித்தபோது, கேரளத்தில் இருந்து குலசேகரம் செல்வதாக கூகுள் வழிகாட்டியை பார்த்து வந்தபோது சிக்கியதாக கூறினர். பின்னர், அந்த வாலிபர்களை பத்திரமாக அனுப்பி வைத்தனர்.