தமிழக செய்திகள்

"இந்துக்களுக்கு எதிரான அரசு" - ராஜ்மோகனை கடுமையாக விமர்சித்த நயினார் நாகேந்திரன்!

கடந்த ஆண்டு உங்கள் தலைவரை பார்க்க கரூரில் கூடிய கூட்டத்தில் சிக்கி, சின்னஞ்சிறு குழந்தைகள் உட்பட 41 பேர் அநியாயமாக உயிரிழந்தனர்.

சென்னை,

தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-

நேற்று கரூரில் நடந்த விழாவில் “Praise the Lord, அஸ்ஸலாமு அலைக்கும்” என்று பிற மதத்தினரின் கடவுள்களை வணங்கிவிட்டு, இந்துக் கடவுள்களை வேண்டுமென்ற ஒதுக்கிய, உங்களைப் போன்ற இந்துமத வெறுப்பாளர்கள் உள்ளவரை, “மதநல்லிணக்கம்” என்பது சமூகத்தில் மருந்திற்கும் படராது. “அனைவருக்குமான ஆட்சி” என்று கூறிக்கொண்டு இந்து மதத்தின் மீது மட்டும் இப்படி வெளிப்படையாக ஒவ்வாமையை காட்டுவது கடும் கண்டனத்திற்குரியது.

வன்ம அரசியல்

கடந்த ஆண்டு உங்கள் தலைவரை பார்க்க கரூரில் கூடிய கூட்டத்தில் சிக்கி, சின்னஞ்சிறு குழந்தைகள் உட்பட 41 பேர் அநியாயமாக உயிரிழந்தனர். அப்பொழுது நேரில் வந்து ஆறுதல் சொல்ல திராணியின்றி ஓடி, ஒளிந்த நீங்களும் உங்கள் தலைவரும் கிட்டத்தட்ட ஒரு வருடம் கழித்து, நேற்றைக்கு தான் வழி கண்டுபிடித்து கரூருக்கு வந்தீர்கள். அப்படியிருக்கையில் வந்த வேலையை விட்டு விட்டு, ஆறுதல் கூறும் நிகழ்விலும் கூட, இந்துக்களின் மீது இப்படியொரு வன்ம அரசியலைத் தொடுக்கும் உங்களைப் போன்ற அழுகிய சிந்தனை கொண்டவர்களை தமிழகம் என்றுமே மன்னிக்காது.

இந்துக்களுக்கு எதிரான அரசு

காரணம், தமிழகம் அடிப்படையில் ஓர் ஆன்மீக பூமி. நாம் காலங்காலமாக போற்றிப் பாதுகாத்து வரும் நமது தமிழ் இலக்கியங்களும், புராணங்களும் சிவன், திருமால், முருகன் உள்ளிட்ட இந்துக் கடவுள்களையே ஆராதிக்கின்றன. ஆனால், இவையனைத்தையும் புறந்தள்ளிவிட்டு, “வாக்கு வங்கி”யை மட்டுமே மனதில் வைத்து, உங்கள் தவெக அரசை இந்துக்களுக்கு எதிரான அரசாக நிலைநிறுத்தியுள்ள நீங்களும், அதை மௌனமாக ஆதரிக்கும் உங்கள் தலைமையும் கூடிய விரைவில் இதற்கான விளைவுகளை எதிர்கொள்வீர்கள்!

இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.