தமிழகத்தில் அரசு கல்லூரி ஆசிரியர்களுக்கு பணி மேம்பாட்டு ஊதியம் (Career Advancement Scheme- CAS) வழங்கப்பட்டு வரும் நிலையில், அரசு உதவி பெறும் கல்லூரி ஆசிரியர்களுக்கு கடந்த 5 ஆண்டுகளாக இந்த ஊதியம் வழங்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தங்களுக்குச் சேர வேண்டிய இந்த ஊதிய உயர்வை உடனடியாக வழங்க வலியுறுத்தி, அரசு உதவி பெறும் கல்லூரி பேராசிரியர்கள் பல்வேறு தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.
இதன் தொடர்ச்சியாக நேற்று மாலை தூத்துக்குடி சிதம்பரநகர் பேருந்து நிறுத்தம் அருகே திரண்ட பேராசிரியர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மூட்டா (MUTA) மூன்றாம் மண்டல தலைவர் லெனின் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை வகித்தார்.
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில துணை தலைவர் முருகன் போராட்டத்தைத் தொடங்கி வைத்துப் பேசினார். மூட்டா மத்திய இணைச் செயலாளர் சிவஞானம் கோரிக்கைகள் குறித்து விளக்கி பேசினார். பல்வேறு சங்கங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு தங்களது ஆதரவைத் தெரிவித்தனர்.
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க முன்னாள் மாநில துணை பொதுச் செயலாளர் வெங்கடேசன் போராட்டத்தை நிறைவு செய்து பேசினார். தங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை போராட்டங்கள் தொடரும் என பேராசிரியர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.