தமிழக செய்திகள்

திருச்செந்தூர் கோவில் அன்னதானத்தில் புழுவை நெளியவிட்ட அரசு! - நயினார் நாகேந்திரன்

அரசுக்கு திருக்கோவிலின் வருமானம் மட்டும் முக்கியம், பக்தர்கள் உயிர் முக்கியமில்லையா? என நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பினார்.

சென்னை,

தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் நேற்று மதியம் பரிமாறப்பட்ட அன்னதானத்தில் புழு இருந்ததாக வெளிவந்துள்ள காணொளி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது.

உயிர் முக்கியமில்லையா?

இரண்டு நாட்களுக்கு முன்பு திருச்செந்தூர் திருக்கோவிலின் சேவைக் கட்டணத்தை நான்கு மடங்கு உயர்த்தத் திட்டமிட்டதில் காட்டிய அக்கறையை அன்னதான உணவின் தரத்தில் காட்டாதது ஏன்? ஜோசப் விஜய் அரசுக்கு திருக்கோவிலின் வருமானம் மட்டும் முக்கியம், பக்தர்கள் உயிர் முக்கியமில்லையா?

அன்று முறுக்கு பாக்கெட்டு உற்பத்தித் தேதிக்கு ஆதாரம் கேட்ட இந்து அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ், இன்று புழு நெளிந்ததாக எழுந்துள்ள புகாரை எளிதாகக் கடந்து செல்லக் கூடாது! உடனடியாக புகாரை தீர விசாரித்து, அன்னதான உணவின் தரத்தை உறுதி செய்ய வேண்டும் என முதல்-அமைச்சர் விஜய் தலைமையிலான அரசை வலியுறுத்துகிறேன்!

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.