தமிழக செய்திகள்

அதல பாதாளத்திற்கு வீழ்ந்த அரசு கலைக் கல்லூரி மாணவர் சேர்க்கை: அன்புமணி கவலை

கல்வித்தரம் வீழ்ச்சியடைந்ததே சீரழிவுக்குக் காரணம் என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

சென்னை,

பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது;-

தமிழ்நாட்டில் அரசு கலை & அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்காக காலக்கெடு முடிவடைந்துள்ள நிலையில், இன்னும் 43 சதவீத இடங்கள் நிரப்பப்படாமல் காலியாக கிடப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் பெரும் அதிர்ச்சியளிக்கின்றன. ஒரு காலத்தில் அரசு கல்லூரிகளில் சேர மாணவர்கள் தவமாய் தவம் கிடந்த நிலையில், மீண்டும், மீண்டும் அழைத்தாலும் மாணவர்கள் சேர மறுக்கும் நிலை உருவாகியிருப்பது கவலையளிக்கிறது.

43.68 சதவீத இடங்கள் நிரப்பப்படவில்லை

தமிழ்நாடு அரசின் உயர்க்கல்வித் துறையின் கீழ் 181 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. அவற்றில் மொத்தம் ஒரு லட்சத்து 26,959 இடங்கள் உள்ளன. அந்த இடங்களுக்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பு கடந்த மே 6-ஆம் தேதி வெளியிடப்பட்டு, மே 7-ஆம் தேதி முதல் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. மே 29-ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் பெறப்பட்ட நிலையில், அரசு கல்லூரிகளில் சேர 2.24 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்தனர். அவர்களுக்கான கலந்தாய்வு ஜூன் 5-ஆம் தேதி முதல் 18-ஆம் தேதி வரை நடைபெற்று முடிந்த நிலையில் வெறும் 71,502 இடங்கள், அதாவது 56.32 சதவீத இடங்கள் மட்டும் தான் நிரப்பப்பட்டுள்ளன. மீதமுள்ள 43.68 சதவீதம், அதாவது 55,457 இடங்கள் இன்னும் நிரப்பப்படவில்லை.

காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்காக கடந்த ஜூன் ஒன்றாம் தேதி முதல் மீண்டும் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. ஆனாலும் கூட அதற்கு பெரிய அளவில் வரவேற்பு கிடைக்கவில்லை. தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் வரலாற்றில் இதுவரை இவ்வளவு இடங்கள் காலியாக இருந்தது இல்லை. கடந்த ஆண்டில் அரசு கலைக் கல்லூரி மாணவர் சேர்க்கை ஜூன் மாதத்துடன் முடிவடைந்த நிலையில், மொத்தமுள்ள 1.26 லட்சம் இடங்களில் 96 ஆயிரம் இடங்கள், அதாவது 76.20 சதவீத இடங்கள் நிரப்பப்பட்டிருந்தன. 25 சதவீத இடங்கள் நிரப்பப்படாமல் இருந்தது தான் மாணவர் சேர்க்கையில் மிக மோசமான வீழ்ச்சியாகப் பார்க்கப் பட்டது. ஆனால், இப்போது அதையும் தாண்டி கிட்டத்தட்ட பாதிக்கு பாதி இடங்கள் நிரப்பப்படவில்லை.

தமிழ்நாட்டிலுள்ள அரசு கலைக் கல்லூரிகளில் சேர கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை கடுமையான போட்டி நிலவியது. கல்லூரிகளில் உள்ள இடங்கள் முழுமையாக நிரப்பப்பட்ட பிறகும் கூட, ஆயிரக்கணக்கான மாணவர்கள் இடம் கிடைக்காமல் தவித்ததால் 25 சதவீத இடங்கள் கூடுதலாக உருவாக்கப்பட்டு, அந்த இடங்களும் முழுமையாக நிரப்பப்படும் நிலை இருந்தது. ஆனால், அண்மைக்காலமாக நிலைமை மாறி வருகிறது. தமிழக அரசே வெளியிட்டுள்ள புள்ளி விவரங்களின் அடிப்படையில் 2022-23ஆம் ஆண்டில் 170 அரசுக் கல்லூரிகளில் இளநிலை முதலாம் ஆண்டில், ஒரு லட்சத்து 8,748 மாணவர்கள் சேர்ந்தனர். 2023-24ஆம் ஆண்டில் 171 கல்லூரிகளில் சேர்ந்த மாணவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 5,258 ஆகக் குறைந்தது. அதற்கு அடுத்த ஆண்டில், 172 அரசுக் கல்லூரிகளில் சேர்ந்தவர்களின் எண்ணிக்கை வெறும் 98,885 மாணவர்கள் மட்டும் தான். 2025-26ஆம் ஆண்டில் மாணவர் சேர்க்கை எண்ணிக்கை 96,000 ஆக வீழ்ச்சியடைந்தது. ஆனால், அதையும் தாண்டி நடப்பாண்டில் மாணவர் சேர்க்கை அதலபாதாளத்திற்கு சென்றிருக்கிறது.

கல்வித்தரம் மோசமடைந்து வருகிறது

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உயர்கல்வி கிட்டத்தட்ட இலவசமாகவே வழங்கப்படுகிறது. ஆனால், தனியார் கல்லூரிகளில் கலை மற்றும் அறிவியல் பட்டப்படிப்புகளுக்கு ஆண்டுக்கு ரூ.40,000 முதல் ரூ.70,000 வரை கல்விக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆனால், இவற்றையெல்லாம் பொருட்படுத்தாமல், அரசு கல்லூரிகளை புறக்கணித்து விட்டு, தனியார் கல்லூரிகளில் மாணவர்கள் சேருவதற்கு முதன்மைக் காரணம் அரசு கலைக் கல்லூரிகளில் கல்வித்தரம் ஆண்டுக்கு ஆண்டு மோசமடைந்து வருவது தான்.

தமிழ்நாட்டில் உள்ள 181 அரசு கலைக்கல்லூரிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட கல்லூரிகளில் முதல்வர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இரு ஆண்டுகளுக்கும் மேலாக காலியாகக் கிடக்கும் முதல்வர் பணியிடங்களை நிரப்ப தமிழக அரசு எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை. அதேபோல், மொத்தமுள்ள சுமார் 10,500 உதவிப் பேராசிரியர் பணியிடங்களில் சுமார் 9000 பணியிடங்கள் காலியாக உள்ளன. அரசு கல்லூரிகளில் பாடங்களைக் கற்பிக்க ஆசிரியர்களே இல்லாத நிலையில், கல்வித்தரம் மோசமடைந்து வருகிறது. அதனால் தான் அண்மைக்காலமாக மாணவர்கள் அரசு கல்லூரிகளை புறக்கணித்து தனியார் கல்லூரிகளுக்கு செல்கின்றனர்.

நடவடிக்கை எடுக்க வேண்டும்

அரசு கலைக் கல்லூரிகளில் காலியாக உள்ள உதவிப் பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவதன் மூலம் தான், அரசு கல்லூரிகள் மீதான மாணவர்களின் நம்பிக்கையைப் பெற முடியும். ஆனால், கடந்த 12 ஆண்டுகளாக அரசு கல்லூரிகளுக்கு உதவிப் பேராசிரியர்கள் நியமிக்கப்படவில்லை. 2708 உதவிப் பேராசிரியர்களை தேர்வு செய்ய கடந்த ஆண்டு அறிவிக்கை வெளியிடப்பட்ட போதிலும் அவர்களில் 5 பேர் மட்டுமே இதுவரை நியமிக்கப்படுள்ளனர். இதேநிலை நீடித்தால் அரசு கல்லூரிகளின் கல்வித்தரம் மேகும் வீழ்ச்சியடைந்து விடும்.

அத்தகைய நிலை ஏற்படுவதைத் தடுக்க அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள அனைத்து உதவிப் பேராசிரியர் இடங்களையும் உடனடியாக நிரப்ப வேண்டும். அதன் மூலம் அரசு கலைக் கல்லூரிகளின் கல்வித் தரத்தையும், மாணவர் சேர்க்கையையும் மேம்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.