கரூர்,
கரூர் சுங்ககேட் பகுதியில் கிரேன் மீது அரசு பஸ் மோதியது. இந்த விபத்தில் பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
திருப்பூரில் இருந்து திருவாரூர் மாவட்டத்திற்கு சென்று கொண்டிருந்த அரசு பஸ் நேற்று கரூர் புதிய பஸ் நிலையம் வந்தது. பின்னர் அந்த பஸ் திருவாரூர் மாவட்டத்திற்கு பயணிகளுடன் புறப்பட்டு சென்று கொண்டிருந்தது. அப்போது பெட்ரோல் விற்பனை நிலையத்தில் இருந்து கிரேன் ஒன்று வெளியே வந்து சாலைக்குள் நுழைந்தபோது அந்த வழியாக சென்ற அரசு பஸ் எதிர்பாராதவிதமாக கிரேன் மீது மோதியது. இதில் அங்கு வைக்கப் பட்டிருந்த பதாகைகள் மீது மோதி கிரேன் கவிழ்ந்தது. மேலும் அரசு பஸ்சின் முன்பகுதி சேதம் அடைந்தது.
இந்த விபத்தில் பஸ்சில் இருந்த பயணிகள் அதிர்ஷ்டவசமாக எந்தவித காயமும் இன்றி உயிர் தப்பினர். இந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இந்த விபத்து குறித்து தாந்தோணிமலை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்து தொடர்பான வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.